யாழில் ஆசிரியரின் வீட்டில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருட்டு - சந்தேக நபர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, July 18, 2021

யாழில் ஆசிரியரின் வீட்டில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருட்டு - சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணம், நல்லூர் ஆலயத்துக்கு அண்மையில் கடந்த 4 ஆம் திகதி 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளைத் திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், திருடப்பட்ட நகைகளில் பெரும்பாலானவை சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

நல்லூர் ஆலயத்துக்கு அண்மையில் உள்ள ஆசிரியரின் வீடொன்றில் கடந்த ஜூலை 4 ஆம் திகதி பெருமளவான நகைகள் திருடப்பட்டன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் நாவற்குழியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 7 தங்கப் பவுண் தாலிக் கொடி, நெக்ளஸ், ஒரு தங்கப் பவுண் அளவுடைய 3 சங்கிலிகள், 3 சோடி தோடுகள், ஒரு மூக்குத்தி, 2 மோதிரங்கள், பெறுமதி வாய்ந்த அலைபேசி ஒன்று மற்றும் 2 பவுண் தங்க நகையை விற்பனை செய்த சிட்டை என்பன கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நாளை முற்படுத்தப்படுவார்.

யாழ்ப்பாணம் மாவட்ட மூத்த பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகேயின் வழிகாட்டலில் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பெரரா தலைமையிலான மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

உப பொலிஸ் பரிசோதகர்கள் பிரதீப், பஸ்நாயக்க மற்றும் பொலிஸ் கான்டபில்கள் அஜந்தன், ஜெயந்தன், சம்பத், பூரணச்சந்திரன், கமகே, தென்னக்கோன் மற்றும் சந்திரரத்ன ஆகியோர் அடங்கிய குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

பொதுமக்கள் வீடுகளிலிருந்து அயலில் செல்வதாயினும் வீட்டு வாயில்களை நன்றாக மூடிவிட்டுச் செல்லவேண்டும் என்று பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுள்ளனர்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment