மாணவர்களுக்கு தொலைக் கல்வியை வழங்கும் நோக்கில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 16 தொலைக்காட்சி அலைவரிசைகள் - சுசில் பிரேமஜயந்த - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

மாணவர்களுக்கு தொலைக் கல்வியை வழங்கும் நோக்கில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 16 தொலைக்காட்சி அலைவரிசைகள் - சுசில் பிரேமஜயந்த

கொவிட்19 தொற்று பரவல் நிலைமையால் வீடுகளிலிருக்கும் மாணவர்களுக்கு தொலைக் கல்வியை வழங்கும் நோக்கில் ஒவ்வொரு வகுப்புகளுக்குமென 16 தொலைக்காட்சி அலைவரிசைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் தொலைக் கல்வி முறை தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும் போதே கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நான் இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்ற பின்னர் அரச மற்றும் தனியார் தொலைக்காட்சிகளின் அலைவரிசை பிரதானிகளுடன் கலந்துரையாடினோம். இதன்படி செனல் ஐ ஊடாக தற்போது கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அவை நடைபெறுகின்றன. தேசிய அலைவரிசைகளில் நஷ்டத்துடனும் அந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதேவேளை தற்போது கொழும்பில் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களையும் அழைத்து கலந்துரையாடல் நடத்தப்படுகின்றது. அதன்படி 16 அலைவரிசைகளை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு அலைவரிசை என்ற ரீதியில் செய்மதி முறையில் அந்த அலைவரிசைகள் தயாரிக்கப்படவுள்ளன. காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரையில் வகுப்பில் கற்பிப்பதை போன்றே அது நடக்கும்.

இந்த கொவிட்19 நிலைமை எப்போது முடியுமென்று தெரியாது. இதனால் நாங்கள் மாணவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கின்றோம். 

இதேவேளை தனியார் தொலைக்காட்சிகள் ஏற்கனவே ஒளிபரப்பிய நாடகங்கள், படங்களை மீள ஒளிபரப்புவதை நிறுத்தி அதனை கல்விக்காக ஒதுக்கலாம். அல்லது மாணவர்களுக்கான உடற்பயிற்சிக்காக அரை மணி நேரத்தை ஒதுக்கலாம் என்றும் கேட்கின்றோம்.

இதேவேளை தொலைக் கல்வி தொடர்பாக தேசிய கொள்கைத் திட்டம் தயாரிக்கப்படாது. ஆனால் அது தொடர்பான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். 

அத்துடன் சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஈ- தக்ஸலாவ என்ற திட்டம் உள்ளது. இதில் முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையில் சகல பாடத்திட்டங்களும் உள்ளன. அந்த இணையத்திற்குள் இலவசமாக பிரவேசிக்கலாம்.

தற்போது நாடு முழுவதும் உள்ள 43 இலட்சம் மாணவர்களில் 35 இலட்சம் பேரே தொலைக் கல்வியில் தொடர்புபடுகின்றனர். 8 இலட்சம் பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது போயுள்ளது. இதனால் இந்த மாணவர்களுக்காக விசேட வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். 2100 தொலைக் கல்வி மத்திய நிலையங்களை ஆரம்பித்துள்ளோம். அவர்களுக்கு அந்த இடங்களுக்கு சென்று கல்வியை தொடரலாம் என்றார்

ஷம்ஸ் பாஹிம் சுப்பிரமணியன் நிஷாந்தன்

No comments:

Post a Comment