ஐரோப்பாவை புரட்டிப் போட்ட பெரு வெள்ளம் : முற்றிலும் அழிந்த கிராமங்கள் : 120 பேர் பலி, 1300 பேரை காணவில்லை - News View

Breaking

Post Top Ad

Saturday, July 17, 2021

ஐரோப்பாவை புரட்டிப் போட்ட பெரு வெள்ளம் : முற்றிலும் அழிந்த கிராமங்கள் : 120 பேர் பலி, 1300 பேரை காணவில்லை

மேற்கு ஐரோப்பாவில் பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் குறைந்தது 120 பேர் இறந்துள்ளனர்.

வரலாறு காணாத மழையால் நதிகளில் உடைப்பு ஏற்பட்டு, அப்பிராந்தியமே பெருமளவு சேதமடைந்துள்ளது.

ஜெர்மனியில் பலி எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான தீர்க்கமான போருக்கு அந்நாட்டு சான்சிலர் ஏங்கலா மெர்கல் அழைப்பு விடுத்துள்ளார்.

பெல்ஜியத்தில் குறைந்தது 20 பேர் இறந்துள்ளனர். நெதர்லாந்து, லக்சம்பர்க், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மோசமான வெள்ளப் பெருக்கிற்கு பல காரணிகள் இருக்கின்றன. ஆனால், பருவநிலை மாற்றத்தால் வளிமண்டலம் சூடாகி மிக கனமழை பெய்வதுதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

ஜூலை 20 ஆம் தேதியன்று தேசிய துக்க நாளை பிரகடனம் செய்துள்ளார் பெல்ஜியப் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரூ.

"மொத்த உயிரிழப்புகள் எவ்வளவு என்று தெரியவில்லை. ஆனால் இந்த நாடு காணாத மிக மோசமான வெள்ளப் பெருக்கு இதுவாக இருக்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜெர்மனியில் சுமார் 15,000 போலீஸார், ராணுவ வீரர்கள் மற்றும் அவசர நிலை பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பல கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. மேலும் மேற்கு ஜெர்மன் மாவட்டமான அக்விலரில் 1,300 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

"இந்த நிலையை பார்ப்பதற்கே சோகமாக உள்ளது. தெருக்கள், பாலங்கள், சில கட்டடங்கள் எல்லாம் மிகுந்த சேதமடைந்துள்ளன. எங்கு பார்த்தாலும் குப்பையாக இருக்கிறது. கட்டடங்கள் சில வீதிகளில் வீழ்ந்து கிடக்கின்றன. மக்கள் வீடடற்றவர்களாக நிற்கிறார்கள். அவர்கள் அழுதுகொண்டு இருக்கிறார்கள். கார்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. என் நகரம் ஏதோ போர் ஏற்பட்ட இடம் போல காட்சியளிக்கிறது" என்கிறார் ரேயின்பாச் பகுதியின் குடியிருப்புவாசி க்ரேகர் ஜெரிசோ.
பருவ நிலை மாற்றம் எப்படி வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துகிறது?
உலகம் வெப்பமடைவதால், அதிக நீர் ஆவியாக மாறுகிறது. இதனால் வருடாந்திர மழை மற்றும் பனிப்பொழிவும் அதிகமாகிறது.

மேலும், வளிமண்டலம் சூடாக இருந்தால், அதனால் அதிக ஈரத்தன்மையை தக்க வைத்துக் கொள்ள முடியும். இதனால் மழை பொழியும் அளவு அதிகரிக்கும்.

இந்த பெரும் மழைப் பொழிவு வெள்ளப் பெருக்குக்கு காரணமாகும்.

எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது?
தன்னுடைய அழிந்துபோன கிராமத்துக்குள் நுழைய முயன்ற வயதான ஒருவரை நாங்கள் சந்தித்தோம். தன்னுடைய பேரன்கள் அங்கு இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால், அவர்களின் பெற்றோர் எங்கு என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

எத்தனை பேர் காணவில்லை என்பது அதிகாரிகளுக்கும் தெரியவில்லை. அந்தப் பிராந்தியத்தில் செல்பேசி தொடர்புகளும் அவ்வளவாக இல்லை. இதனால் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.

ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம். ஒவ்வொரு மணி நேரம் கடக்கும்போது, எவ்வளவு தூரம் சேதம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

ஹர் நதியினோரம் வீடுகளுக்கு நீர் புகுந்து, பாலங்கள் உடைந்து, சேதமாகியிருப்பதை காண முடிகிறது. அவற்றையெல்லாம் சுத்தப்படுத்தி மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்புவதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad