பாகிஸ்தான் பேருந்து விபத்தில் சீன பொறியாளர்கள் உட்பட 10 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 14, 2021

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் சீன பொறியாளர்கள் உட்பட 10 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்தூங்வா மாகாணத்தில் உள்ள மேல் கோஹிஸ்தானின் தாஸு பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் அணை திட்டம் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் ஆறு சீனர்கள் உட்பட குறைந்தபட்சம் 10 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக கோஹிஸ்தான் துணை ஆணையாளர் ஆரிஃப் கான் யூசஃப்சாய் தெரிவிக்கையில், அந்த பேருந்து சாலை விபத்தை எதிர்கொண்டது. இது ஒரு தீவிரவாத தாக்குதலோ வெடிப்பு சம்பவமோ இல்லை என்று கூறினார்.

மிகவும் அபாயகர வளைவைக் கொண்ட சாலைகளில் இது போன்ற விபத்து துரதிருஷ்டவசமாக நடப்பதாக அவர் தெரிவித்தார். "சம்பவ பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஹெலிகாப்டர்கள் வந்துள்ளன," என்று துணை ஆணையாளர் ஆரிஃப் கான் யசஃப்சாய் தெரிவித்தார்.

அந்த பேருந்தில் ஆறு சீனர்கள், இரண்டு துணை ராணுவப்படை காவலர்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருந்ததாக தெரிய வந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், மாவட்ட நிர்வாகத்தின் உயரதிகாரியொருவர், சீன பொறியாளர்கள் பயணம் செய்த பேருந்து சென்ற பகுதியில் மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

காரகோரம் நெடுஞ்சாலை பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

தாஸு பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மேல் கோஹிஸ்தான் பகுதி. அங்கு சம்பவ பகுதியை பார்வையிட கைபர் பக்தூங்வா மாகாண நிர்வாகத்தின் சார்பில் உயர்நிலைக்குழு புறப்பட்டுள்ளது. மாகாண முதல்வரின் சிறப்பு செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பேசுகையில், "புதன்கிழமை காலையில் இந்த சம்பவம் நடந்தது. வழக்கம் போல அணை திட்ட பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர வெடிச்சத்தம் ஏற்பட்டது. உடனடியாக அந்த பேருந்து கவிழ்ந்தது. அப்போது பேருந்துக்குள் இருந்தவர்கள் கூக்குரல் எழுப்பியதை கேட்க முடிந்தது," என்றனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசிகள், பேருந்து விழுந்த இடத்தை நோக்கி உடனடியாக நாங்கள் சென்றோம். காயம் அடைந்தவர்கள் உதவிக்காக குரல் கொடுத்ததையும் கேட்க முடிந்தது," என்று கூறினர். 

No comments:

Post a Comment