ரணிலை பாராளுமன்றம் அனுப்புவதற்கான காரணம் என்ன ? - விளக்குகிறார் ஆசுமாரசிங்க - News View

About Us

About Us

Breaking

Monday, June 7, 2021

ரணிலை பாராளுமன்றம் அனுப்புவதற்கான காரணம் என்ன ? - விளக்குகிறார் ஆசுமாரசிங்க

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் வாய்திறக்காததன் காரணமாகவே எமது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாகப் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தீர்மானித்தோம் என அக்கட்சியின் உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்தார்.

இது குறித்து அவரால் வெளியிடப்பட்டுள்ள காணொளியில் மேலும் கூறியிருப்பதாவது கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் தற்போதைய பாராளுமன்றம் அதற்குரிய கடமையைச் செய்வதற்குத் தவறியிருக்கிறது. ஏனைய உலக நாடுகள் அந்நாடுகளின் அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் ஊடாகவே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இங்கிலாந்து, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, ஜப்பான், ஈஸ்ரேல், மலேசியா போன்ற நாடுகளின் அமைச்சரவை அந்தந்த நாடுகளின் சுகாதாரப் பிரிவினரிடம் ஆலோசனைகளைப் பெற்று செயற்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தைப் பொறுத்த வரையில் ஜனாதிபதியும் அமைச்சரவையும் சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும்.

அதேவேளை இந்த நெருக்கடியை வெற்றி கொண்ட நாடுகள் எவையும் வைத்தியர்களிடம் மாத்திரம் பொறுப்பைக் கையளித்துவிட்டு, வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கவில்லை. எனவே எமது நாட்டின் நெருக்கடிநிலைக்கு அமைச்சரவை பொறுப்புக்கூற வேண்டும்.

உலகின் அனைத்து நாடுகளிலும் அந்நாடுகளின் பாராளுமன்றங்களே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடுமையாகப் போராடுகின்றன. மாறாக அனைத்திற்கும் ஒவ்வொரு ஆணைக்குழுக்களை நியமிப்பதன் ஊடாக மாத்திரம் பிரச்சினைகளுக்குத் தீர்வை எட்டிவிட முடியாது.

அதேபோன்று பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்கள் அவ்வப்போது சந்தித்து இவ்விடயம் தொடர்பில் ஆராய வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சிக்குரிய தேசிய பட்டியல் ஆசனத்திற்கு எமது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வருவது குறித்து எதிர்க்கட்சியின் சிலர் அதீத ஆர்வத்தைக் காண்பிக்கிறார்கள்.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் பேசாததன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க உடனடியாகப் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்று எமது செயற்குழுக்கூட்டத்தில் தீர்மானித்தோம் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment