என்னை தெரிவு செய்த மக்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் பல இருப்பதால் கட்சியின் பாராளுமன்ற ஆசனத்தை எனக்கு வழங்க வேண்டும் : ஞானசார தேரர் - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

என்னை தெரிவு செய்த மக்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் பல இருப்பதால் கட்சியின் பாராளுமன்ற ஆசனத்தை எனக்கு வழங்க வேண்டும் : ஞானசார தேரர்

(ஆர்.யசி)

எமது மக்கள் சக்தி கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரருக்கு கொடுக்கப்பட்ட பாராளுமன்ற காலம் ஜூன் மாதம் 6ஆம் திகதியுடன் முடிவுக்கு வருவதால் அடுத்ததாக கட்சியின் பாராளுமன்ற ஆசனத்தை எனக்கு வழங்க வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

என்னை தெரிவு செய்த மக்களுக்காக நான் செய்ய வேண்டிய கடமை பொறுப்புகள் பல இருப்பதால் அதனை பாராளுமன்ற உறுப்பினர் என்ற அங்கீகாரத்துடன் செய்து முடிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

எமது மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு பாராளுமன்ற ஆசனத்தை பெற்றுக் கொள்வதில் ஆரம்பத்தில் இருந்தே கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் ஆறு மாத காலத்திற்காக அதுரலியே ரதன தேரர் பாராளுமன்றத்திற்கு வந்திருந்தார். தற்போது அவருக்கான பாராளுமன்ற காலம் முடிவுக்கு வருவதால் அது குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு கூறியுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் முஸ்லிம் அடிப்படைவாதத்தை முழுமையாக தடுக்கவும், சிங்கள மற்றும் தமிழ் கலாசார, பண்பாடுகளை பாதுகாக்கவும், நில ஆக்கிரமிப்பை தடுக்கவும் அதற்கான வாத விவாதம் செய்யவும், சட்டமியற்றும் சபையில் எமது குரலை பரப்பவும் நாம் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற தீர்மானம் எடுத்தோம். அதற்கான முயற்சிகளை எடுத்தும் முழுமையாக அது எமது கைகளுக்கு கிடைக்கவில்லை. அதன் பின்னர் பல முரண்பாடுகள் ஏற்பட்டன. 

இறுதியாக அதுரலியே ரதன தேரருக்கு ஆறு மாத கால பாராளுமன்ற அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தோம். இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து ஆறு மாத காலத்தை கணக்கிட்டால் அடுத்த மாதம் 5 ஆம் திகதியுடன் அவருக்கான ஆறு மாத காலம் முடிகின்றது. அவர் மூன்று மாத கால அனுமதியையே கேட்டார் எனினும் ஆறு மாதம் கொடுத்தோம். ஆகவே அவர் இப்போது உறுப்புரிமையை எனக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்.

எனவே அடுத்ததாக எனது பெயரை பரிந்துரைத்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும். எனவே அதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்க காலம் சரியாக உள்ளது. ஆகவே அடுத்ததாக எனது கடமையை நான் தொடர வேண்டும். அதற்காக எனக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும். எனவே ஏற்கவனே நாம் பேசி தீர்மானித்ததிற்கமைய இப்போது எனக்கு பாராளுமன்ற ஆசனத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad