கப்பலின் கெப்டன் நிறுவனத்துடன் பகிர்ந்த மின்னஞ்சல்கள் சி.ஐ.டி.யினரால் ஆராய்வு : மூழ்கும் கப்பலை பார்வையிட்ட சிறப்புக் குழுவினர் - News View

Breaking

Post Top Ad

Saturday, June 5, 2021

கப்பலின் கெப்டன் நிறுவனத்துடன் பகிர்ந்த மின்னஞ்சல்கள் சி.ஐ.டி.யினரால் ஆராய்வு : மூழ்கும் கப்பலை பார்வையிட்ட சிறப்புக் குழுவினர்

எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பல் தொடர்பிலான குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி.யின் சிறப்புக்குழு, கப்பலின் கெப்டனான ரஷ்ய நாட்டு பிரஜைக்கும், கப்பல் நிறுவனமான எக்பிரஸ் பீடர்ஸ், அக்கப்பலின் இலங்கை பிரதிநிதியான சீ கன்சோர்டியம் லங்கா தனியார் நிறுவனம் ஆகியவற்றுடன் பகிர்ந்த மின்னஞ்சல்களை விஷேடமாக ஆராய்ந்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி சிங்கப்பூரியிலிருந்து எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பயணத்தை ஆரம்பித்தது முதல், கப்பல் நிறுவனம் கெப்டனுக்கு வழங்கிய ஆலோசனைகள், கப்பலின் கெப்டன் கப்பல் நிறுவனத்திடமும், அதன் இலங்கை முகவரிடமும் முன்வைத்த கோரிக்கைகள் குறித்த மின்னஞ்சல்களில் அடங்கியுள்ளதால் அவை மிகக்கவனமாக ஆராயப்பட்டு வருவதாக சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.

இது தொடர்பில் விடயங்களை பகிர்ந்துகொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவும், அதனை உறுதி செய்த நிலையில், குறித்த மின்னஞ்சல்கலின் உள்ளடக்கம் விசாரணையாளர்களால் அவதானத்துக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

இதனைவிட, கப்பலின் பிரதம அதிகாரி என அறியப்படும் கப்பலின் கொள்கலன்களை மேற்பார்வை செய்யும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பணியாளரிடம் சி.ஐ.டி. தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. 

குறிப்பாக கப்பல் தீ பரவலுக்கு காரணம் என நம்பப்படும் நைற்றிக் அமிலக் கசிவு, அரேபிய கடலிலேயே அவதானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயத்தை மையப்படுத்தி இந்த விசாரணைகள் முடக்கி விடப்பட்டுள்ளன.

குறிப்பாக கப்பலில் குறித்த நைற்றிக் அமிலக் கொள்கலன் வைக்கப்பட்டிருந்த இடம், அதன் கசிவு அவதானிக்கப்பட்ட விதம், குறித்த கொள்கலனுடன் இருந்த ஏனைய கொள்கலன்கள், நைற்றிக் அமிலம் பொதி செய்யப்பட்டிருந்த விதம் தொடர்பில் பூரண விசாரணைகள் குறித்த கப்பலின் பிரதம அதிகாரியிடம் விசாரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த கப்பலின் 13 பணியாளர்களிடம் இதுவரை விசாரணை செய்யப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க மற்றும் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் இடம்பெறும் இந்த விசாரணைகளில், சி.ஐ.டி.யின் சிறப்புக்குழு மூழ்கும் கப்பலை பார்வையிட்டது.

கடற்படையினரின் உதவியுடன் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான ' சாம ஆரக்ஷா' எனும் கப்பலில் விசாரணைகளுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சரின் கீழ் 10 சி.ஐ.டி. அதிகாரிகளும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகளும் சென்று குறித்த கப்பலை பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த கப்பல் தொடர்பில் விஷேட விடயங்களை அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் அவதானித்துள்ள நிலையில், அது தொடர்பிலான பகுப்பாய்வு நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுக்கவுள்ளனர்.

இவ்வாறான நிலையில் தற்போது கப்பலின் கெப்டன் உள்ளிட்ட 25 பணியாளர்களுக்கும் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், சி.ஐ.டி. விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என கப்பல் நிறுவனமான எக்ஸ்பிரஸ் பீடர்ஸ் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் விசாரணைக்கு மிக முக்கியமான விமானத்தின் கறுப்புப் பெட்டியை ஒத்த கப்பலின் வி.டி.ஆர். பதிவுகள் சி.ஐ.டி.யினருக்கு கிடைக்கப் பெற்றதை உறுதி செய்ய முடியவில்லை.

(எம்.எப்.எம்.பஸீர்) கேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad