அஸ்ட்ரா செனகா இரண்டாவது தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் உடனடியாகத் தலையிட வேண்டும் - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 9, 2021

அஸ்ட்ரா செனகா இரண்டாவது தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் உடனடியாகத் தலையிட வேண்டும் - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

அஸ்ட்ரா செனகா முதலாவது மாத்திரை பெற்றவர்கள் தற்பொழுது அதன் இரண்டாவது மாத்திரையை பெறமுடியாமல் இருப்பதாகவும், அரசாங்கம் இதுவரை இந்தத் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி உள்ளதாகவும் தேவையைவிட அதிகமாக இந்த தடுப்பூசியை வைத்துள்ள அமெரிக்கா போன்ற நாடுகளின் ஊடாக இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்வது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதுவரை எமக்கு தெளிவான ஒரு முடிவு கிடைக்கப் பெற்றவில்லை எனவும் நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். 

இன்று 09.06.2021 அமைச்சில் ஒன்லைன் ஊடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர், தனியார் துறையில் ஒரு சில மோசடியான வர்த்தகர்கள் அஸ்ட்ரா செனகா தடுப்பூசி ஒரு சிறு தொகையை பெற்றுத்தருவதாக அரசுடன் பேச்சுவார்த்தை செய்கின்றனர். எமக்கு அது தொடர்பில் நம்பிக்கையில்லை. ஏதாவது ஒரு அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தி நிறுவனமொன்று இது தொடர்பில் உறுதிப்படுத்துவதில்லை எனின் அதனை எமக்கு நம்ப முடியாது. எமக்கு பாதுகாப்பான அஸ்ட்ரா செனகா தடுப்பூசியே தேவை.

இதனைப் பெற்றுக் கொள்வதற்காக உள்ள அனைத்து சட்ட ரீதியான முறைகளையும் நாம் பார்க்கின்றோம். தற்பொழுது உலக சுகாதார ஸ்தாபனம் கைகட்டி நிற்க முடியாது. எமது நாட்டுக்கு அஸ்ட்ரா செனகா முதலாவது மாத்திரை இந்தியாவினால் கிடைக்கப் பெற்றது. அதன்போது இரண்டாவது மாத்திரையும் தருவதாக இந்தியா இணக்கம் தெரிவித்து இருந்தது. எனினும் இந்தியாவில் ஏற்பட்ட நிலைமை காரணமாக அந்த விநியோகத்தை திட்டமிட்டது போன்று மேற்கொள்ள முடியாமல் போனது. எமக்கு இதனை புரிந்து கொள்ள முடியும்.

எனினும் உலக சுகாதார ஸ்தாபனம் உடனடியாக இது தொடர்பில் நிபுணர்களை அழைத்து மாநாடு ஒன்றை நடத்தி இந்தப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட வேண்டும். அஸ்ட்ரா செனகா முதலாவது மாத்திரையை பெற்றுக் கொண்ட சுமார் 6 லட்சம் மக்கள் இலங்கையில் உள்ளனர். உலகில் முதலாவது மாத்திரையை பெற்றுக் கொண்ட பல லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் தற்போது மிக கஷ்டமான நிலையில் உள்ளனர்.

அது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் பொறுப்பை ஏற்க வேண்டும். இது மனித குலத்துக்கு எதிரான செயற்பாடாகும். இது மனித உரிமை மீறல் ஆகும். அஸ்ட்ரா செனகா முதலாவது மாத்திரையை வழங்கி இரண்டாவது மாத்திரையை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்று இல்லாமை. அஸ்ட்ரா செனகா தடுப்பூசி அதிகளவான தொகையை, பண பலம் கொண்ட அதிகாரமுள்ள நாடுகள் வைத்துள்ளனர்.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை UNHRC விசேடமாக மனித உரிமைகள் தொடர்பாக செயற்படும் நிறுவனங்களிடம் நாம் கோருவது இந்த குற்றத்துக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான உரிய அழுத்தங்களை சர்வதேசரீதியாக மேற்கொள்ள வேண்டும் என்பதாகும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad