தேவைக்கு மேலதிகமாக உப்பை மக்கள் வாங்க வேண்டியதில்லை : தட்டுப்பாடு ஏற்படுமென்பதோ, இரசாயனம் கலந்து விடுமென்பதோ வீண்புரளி என்கிறார் ஹம்பாந்தோட்டை உப்புக் கம்பனியின் தலைவர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

தேவைக்கு மேலதிகமாக உப்பை மக்கள் வாங்க வேண்டியதில்லை : தட்டுப்பாடு ஏற்படுமென்பதோ, இரசாயனம் கலந்து விடுமென்பதோ வீண்புரளி என்கிறார் ஹம்பாந்தோட்டை உப்புக் கம்பனியின் தலைவர்

தற்பொழுது உள்ள சூழ்நிலையில் எக்காரணம் கொண்டும் நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படாது. நாட்டு மக்களுக்குத் தேவையான போதியளவு உப்பு நம்மிடம் கையிருப்பில் உள்ளது என்று ஹம்பாந்தோட்டை உப்புக் கம்பனியின் தலைவர் சட்டத்தரணி நிஷாந்த சந்தபரண தெரிவித்தார்.

நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக பரவி வரும் வதந்தியைத் தொடர்ந்து மக்கள் உப்பை கொள்வனவு செய்வதற்காக பிரதான நகரங்களில் உள்ள வியாபார நிலையங்களுக்கு படையெடுத்ததைக் காண முடிந்தது. 

உப்பு கொள்வனவு செய்வதற்கு மக்கள் முன்டியடித்து வருவதாக கிடைத்த தகவலையடுத்து, இது தொடர்பாக ஹம்பாந்தோட்டை உப்புக் கம்பனியின் தலைவர் சட்டத்தரணி நிஷாந்த சந்தபரணவுடன் தொடர்பு கொண்டு வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை உப்புக் கம்பனியின் தலைவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது இலங்கை கடற்பரப்பில் கப்பல் தீப்பற்றி எரிந்ததனால் கடல் நீருடன் பல்வேறு வகையான இராசாயனப் பதார்த்தங்கள் கலப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளது. ஆனால் எமது நாட்டின் உப்பு உற்பத்தியில் இது எவ்வித தாக்கத்தினையும் ஏற்படுத்த மாட்டாது. 

எமது நாட்டில் ஒரு போதும் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட மாட்டாது என்பதை உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். கடல்நீருடன் எவ்வாறான பதார்த்தங்கள் கலந்தாலும் அது நாட்டின் உப்பு உற்பத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டாது.

கடல் நீரில் இறுதியாக சோடியம் குளோரைட் மாத்திரமே மீதமாகிறது. ஏனைய சகல இரசாயனப் பதார்த்தங்களும் அதிக வெப்பத்தினால் ஆவியாகி வெளியேறுகின்றன. 

கப்பல் கடலில் தீப்பிடித்துள்ளதனால் எவ்வாறான இரசாயனப் பதார்த்தங்களும் கடல் நீருடன் கலந்தாலும், உப்பு உற்பத்தியின் போது அதிக வெப்பத்தைப் பயன்படுத்தி ஆவியாக்குவதனூடாக இந்த சகல வகையான தேவையற்ற இரசாயனப் பதார்த்தங்களும் அகற்றப்படுகின்றன. 

மீதமாகவுள்ள சோடியம் குளோரைட் மாத்திரம் உப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும். இதனால் மனித பயன்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எப்பொருளும் அதில் அடங்குவதில்லை.

தற்பொழுதும் கூட கடல் நீரில் பல்வேறு வகையான இரசாயனப் பொருள்கள் அடங்கியுள்ளன. இந்த கப்பலினால் மாத்திரமன்றி, இவை பல்வேறு வழிகளினாலும் கடல் நீருடன் கலக்கின்றன. இவை அனைத்தையும் ஆவியாக்கி வெளியேற்றக் கூடியதாய் உள்ளது. இதனால் எமது நாட்டின் உப்பு உற்பத்தியில் இது எவ்வித தாக்கத்தினையும் ஏற்படுத்த மாட்டாது.

நாட்டின் உப்புத் தேவையில் நாற்பது வீதத்தை நாம் ஹம்பாந்தோட்டை உப்பளத்தினூடாக வழங்குகிறோம். தற்பொழுது 125000 மெட்ரிக் தொன்னை விடவும் கூடுதலான தொகை உப்பு மேலதிகமாக எம்மிடம் கையிருப்பில் உள்ளது. எமது நாட்டில் மேலும் பல நிறுவனங்களும் உப்பை உற்பத்தி செய்து வழங்குகின்றன.

இதனால் நாம் ஒரு போதும் தற்பொழுதுள்ள சூழ்நிலையில் உப்பின் உற்பத்தியைக் குறைத்தோ விலையினை அதிகரித்தோ நாட்டு மக்களுக்கு எவ்வித அசௌகரியங்களையும் ஏற்படுத்த மாட்டோம். 

நாட்டு மக்களுக்கு தேவையான அளவு உப்பினை எவ்வித தட்டுப்பாடுகளின்றி நாடு பூராவும் எமது முகவர்களினூடாக விநியோகித்து வருவதனால் பொதுமக்கள் வீணாக அச்சமடைந்து உப்பை சேமித்து வைக்க முயற்சிக்க வேண்டாம் என இவர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

எம்.இர்பான் ஸகரியா
(ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்)

No comments:

Post a Comment

Post Bottom Ad