சஜித்துக்கு தன்னுடன் இருப்பவர்கள் மீது நம்பிக்கை இல்லை : சாரைப்பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றியதுபோல் எதிர்க்கட்சி குழப்படைந்துள்ளது - பாலித ரங்கே பண்டார - News View

About Us

About Us

Breaking

Friday, June 11, 2021

சஜித்துக்கு தன்னுடன் இருப்பவர்கள் மீது நம்பிக்கை இல்லை : சாரைப்பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றியதுபோல் எதிர்க்கட்சி குழப்படைந்துள்ளது - பாலித ரங்கே பண்டார

(எம்.ஆர்.எம்.வசீம்)

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் நம்பிக்கை இல்லை. அதனால்தான் நம்பிக்கை தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து அனுமதித்துக் கொண்டிருக்கின்றனர். ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்துக்கு செல்லும் திகதி அறிவிப்பதற்கு முன்பே சாரைப்பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றியதுபோல் எதிர்க்கட்சி குழப்படைந்திருக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூட்டத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நம்பிக்கை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டுள்ளமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூட்டம் கடந்த திங்கட்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நம்பிக்கை தெரிவித்து நம்பிக்கை பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 

சஜித் பிரேமதாசவுக்கு தன்னுடன் இருக்கும் உறுப்பினர்கள் மீது நம்பிக்கை இருக்குமானால் எதற்காக நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும்.

அத்துடன் சஜித் பிரேமதாச நோயுற்று வைத்தியசாலையில் இருக்கும் நிலையில் இந்த நம்பிக்கை தீர்மானத்தை பாராளுமன்ற குழு கூட்டத்துக்கு சமர்ப்பிக்குமாறு அவருதான் தெரிவித்திருக்கின்றார். சஜித் பிரேமதாசவுக்கு அவருடன் இருப்பவர்கள் மீது நம்பிக்கை இல்லை. அதனால்தான் நம்பிக்கை தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து அனுமதித்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்திக்குள் குழப்பம் இருக்கின்றது என்பது தற்போது அனைவருக்கும் தெரியும். சஜித் பிரேமதாச இந்த நிலைமையை நன்றாக தெரிந்துகொண்டுதான் நம்பிக்கை தீர்மானத்தை கட்டாயப்படுத்தி கொண்டுவரச்செய்து, பலவந்தமாக அதனை அனுமதித்துக்கொண்டிருக்கின்றார். 

நம்பிக்கை தீர்மானம் ஒன்று தேவையில்லை  என பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ரன்ஜித் மத்தும பண்டார ஆகியோர் தெரிவித்திருக்கின்றனர். அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியில் 54 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களில் 32 உறுப்பினர்கள்தான் பாராளுமன்ற குழு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்துள்ளதாக எமக்கு அறியக்கிடைக்கின்றது. 

ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்துக்கு செல்வார் என்று மாத்திரமே நாங்கள் தெரிவித்தோம். அவர் எப்போது செல்வார், எந்த திகதியில் செல்வார் என்று இன்னும் நாங்கள் அறிவிக்கவில்லை. ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்துக்கு வருகின்றார் என்று கேள்விப்பட்ட உடனேயே சாரைப்பாம்புக்கு மண்ணெண்ணெய் தெளித்ததுபோல் இவர்கள் தற்போது குழப்படைந்திருக்கின்றனர் என்றார்.

No comments:

Post a Comment