முறையான வேலைத்திட்டம் இல்லாமலே அரசாங்கம் பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்தி இருக்கின்றது : நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொற்றாளர்கள், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு - விஜித்த ஹேரத் - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

முறையான வேலைத்திட்டம் இல்லாமலே அரசாங்கம் பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்தி இருக்கின்றது : நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொற்றாளர்கள், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு - விஜித்த ஹேரத்

(ஆர்.யசி, எம்,ஆர்.எம்.வசீம்)

கொவிட் தொடர்பான முறையான வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லாமலே தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அதனால் பயணக்கட்டுப்பாடு எந்தளவு காலத்துக்கு அமுல்படுத்தினாலும் அதன் பெறுபேற்றை அடைந்துகொள்ள முடியாது. அதனால்தான் கொவிட் தொற்றாளர்கள் நாளுக்குநாள் அதிகரித்து செல்கின்றனர் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கம் என்ன தெரிவித்தாலும் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு நிலைமை மாறி இருக்கின்றது. அரசாங்கம் பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்தி இருக்கும் இந்த காலத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர். இதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கின்றது. தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் போதுமான வசதிகள் இல்லை. தொற்றுக்குள்ளானவர்களை மத்திய நிலையங்களுக்கு அழைத்துவர வாகன வசதிகள் இல்லை.

மேலும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளபோதும் தொழிற்சாலைகள் செயற்படுகின்றன. கட்டுநாயக்க, பியகம வர்த்தக வலயங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பணி புரிந்து வருகின்றனர். அந்த தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. அங்கு ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே வரிசையில் இருந்து பணிபுரிகின்றனர்.

வேலை முடிவடைந்த பின்னர் அங்குள்ள வாகனத்தில் அவர்கள் தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். தாெழில் புரிகின்றவர்களில் அதிகமானவர்கள் சிறிய விடுதிகளில் ஒன்றாகவே இருக்கின்றனர். அதனால்தான் கம்பஹா மாவட்டத்தில் நாளுக்குநாள் கொவிட் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கருத்திற்கொண்டு தொழில்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றது. என்றாலும் இதற்கு முறையான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள தவறி இருக்கின்றது. கொவிட்டுக்கு முகம்கொடுத்திருக்கும் சர்வதேச நாடுகள் குறுகியகால தீர்மானங்கள் அல்லாமல் நீண்டகால தீர்மானங்களையே மேற்கொண்டுள்ளது.

அதேபோன்று கொவிட் தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கின்றது. ஒன்லைன் கல்வி வெற்றிகரமான வேலைத்திட்டம் அல்ல. வசதிபடைத்த மாணவர்கள் அதில் பயன் பெறுவார்கள். ஆனால் அதிகமான மாணவர்களுக்கு ஒன்லைன் வசதி இல்லை.

மடிக்கணனியோ இஸ்மாட் கையடக்க தொலைபேசியோ இல்லாத பல குடும்பங்கள் இருக்கின்றன. அந்த மாணவர்களுக்கு இந்த கல்வியை தொடர முடியாத நிலையே இருந்து வருகின்றது. இதற்கு முறையான வேலைத்திட்டத்தை மேற்கொள்ள அரசாங்கத்தால் முடியாமல் போயிருக்கின்றது. அதனால் அரசாங்கம் நேரடியாக தலையிட்டு தொலைக்காட்சி ஊடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அல்லது ஒன்லைன் வசதிகளை அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அதேபோன்று கொவிட் தொற்றுடன் நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலை காரணமாக கம்பஹா மாவட்டம் வெள்ளப் பெருக்கினால் பாரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த பாதிப்பு இயற்கையாக ஏற்பட்டது அல்ல. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் முறையற்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களாகும். சிறிய மழைக்குகூட கம்பஹா நகரம் வெள்ளத்துக்கு மூழ்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad