இரண்டாம் கட்டமாக மாற்றுத் தடுப்பூசியை வழங்குவதற்குத் தீர்மானித்தால் அதற்குரிய முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 6, 2021

இரண்டாம் கட்டமாக மாற்றுத் தடுப்பூசியை வழங்குவதற்குத் தீர்மானித்தால் அதற்குரிய முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(நா.தனுஜா)

அஸ்ராசெனெகா முதலாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இயலுமானவரையில் இரண்டாம் கட்டமாகவும் அதனையே வழங்க வேண்டும். அமெரிக்கா, பிரித்தானியா, தென் கொரியா ஆகிய நாடுகள் வசம் அஸ்ராசெனெகா தடுப்பூசி உள்ளது. அவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குறித்த தடுப்பூசியைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக இரண்டாம் கட்டமாக மாற்றுத் தடுப்பூசியை வழங்குவதற்குத் தீர்மானித்தால் அதற்குரிய முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு ஊடகக் குழு உறுப்பினரான வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

கேள்வி முதலாம் கட்டமாக அஸ்ராசெனெகா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டத் தடுப்பூசி கிடைக்கா விட்டால் மாற்றுத் தடுப்பூசியை வழங்கலாம் என்று தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன கூறியிருக்கிறார். இது சாத்தியமா?

பதில் அஸ்ராசெனெகா இரண்டாம் கட்டத் தடுப்பூசி கிடைக்கா விட்டால், அதனையொத்த விளைவைக் காண்பிக்கும் தடுப்பூசியைப் பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டாலும், இன்னமும் அது முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. அதுமாத்திரமன்றி முதலாம் கட்டமாக ஒரு தடுப்பூசியையும் இரண்டாம் கட்டமாகப் பிறிதொரு தடுப்பூசியையும் பயன்படுத்துவதால் தொற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பைப் பெறமுடியுமா என்ற சந்தேகமும் காணப்படுகின்றது.

எனவே இயலுமானவரையில் முதலாம் கட்டமாக அஸ்ராசெனெகா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் அதனையே வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். ஏனெனில் அமெரிக்கா, பிரித்தானியா, தென் கொரியா ஆகிய நாடுகள் வசம் அஸ்ராசெனெகா தடுப்பூசி உள்ளது. எனவே அந்நாடுகளிடம் இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி, குறித்த தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அதனைச் செய்யமுடியாமல், விஞ்ஞானபூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் இரண்டாம் கட்டமாக மாற்றுத் தடுப்பூசியை வழங்குவதற்குத் தீர்மானித்தால் அதற்குரிய முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கேள்வி எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அதிதீவிர பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை மேலும் நீடிப்பது தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில் நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு நோக்குகையில், 14 ஆம் திகதியின் பின்னர் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதால் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும். எனினும் தொடர்ந்தும் நாட்டை முடக்கி வைத்திருக்கவும் முடியாது. ஆகையினால்தான் தடுப்பூசி வழங்கலை செயற்திறனான விதத்தில் முன்னெடுக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். 

நாடளாவிய ரீதியில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. நாட்டில் 30 வயதிற்கு மேற்பட்ட 15 மில்லியன் பேருக்கு இரண்டு கட்டத் தடுப்பூசிகளையும் வழங்குவதற்கு 30 மில்லியன் தடுப்பூசி தேவைப்படுகின்றது. இந்த செயற்திட்டத்தின் காரணமாக பலருக்கு ஒரு கட்டத் தடுப்பூசி மாத்திரம் வழங்கப்பட்டிருப்பதுடன் மேலும் பலருக்குத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையேற்பட்டிருக்கிறது.

ஆனால் இந்தத் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தை மேலும் திறம்பட முன்னெடுக்கக்கூடிய பரிந்துரைகளை நாம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருக்கின்றோம். அதன்படி தற்போது தொற்றினால் உயிரிழப்போரில் அதிகளவானோர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பதனால் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாயமாகத் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று அதில் வலியுறுத்தியிருக்கிறோம்.

அவர்களுக்கு மேலதிகமாக சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய அத்தியாவசிய சேவை வழங்கலில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் 60 வயதிற்கு குறைந்த, தொற்றாத நோய்களுக்குள்ளானோருக்கும் இப்போது தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறோம். அதன்படி இம்மூன்று பிரிவினரையும் உள்ளடக்கிய சனத் தொகை 4.5 மில்லியன் ஆகும். அவர்கள் அனைவருக்கும் இரண்டாம் கட்டத் தடுப்பூசியை வழங்குவதற்கு 9 மில்லியன் தடுப்பூசிகளே தேவை. அதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். தொற்றப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும். அதுமாத்திரன்றி பொருளாதாரத்தையும் நெருக்கடியின்றி முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment