சைனோபார்மை ஏற்றிக் கொண்டவர்கள் இரண்டாம் தடுப்பூசியையும் ஏற்றியாக வேண்டும், இல்லையேல் எந்தப்பலனும் கிடைக்காது - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன - News View

About Us

About Us

Breaking

Sunday, June 6, 2021

சைனோபார்மை ஏற்றிக் கொண்டவர்கள் இரண்டாம் தடுப்பூசியையும் ஏற்றியாக வேண்டும், இல்லையேல் எந்தப்பலனும் கிடைக்காது - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

(ஆர்.யசி)

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பயன்படுத்தும் சைனோபார்ம் மற்றும் சினோவெக்ஸ் தடுப்பூசிகளை பொறுத்த வரையில் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிய பின்னரே உடலில் நோயெதிர்ப்பு சக்தி உருவாகும். ஆகவே முதலாம் தடுப்பூசியாக சைனோபார்மை ஏற்றிக் கொண்டவர்கள் இரண்டாம் தடுப்பூசியையும் ஏற்றியாக வேண்டும். இல்லையேல் எந்தப்பலனும் கிடைக்காது என ஒளடத உற்பத்திகள், விநியோக ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

சீனாவிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், சீனாவிடம் இருந்து ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் எமக்கி கிடைக்கப் பெற்றுள்ளன, அடுத்த வாரத்தில் மேலும் ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.

எனவே இப்போது தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளுக்கு அப்பால் மேலும் 12 மாவட்டங்களில் மக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை நாளை தொடக்கம் ஆரம்பிக்கவுள்ளோம்.

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகில் மூன்று விதமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் எம்.ஆர்.என்.எ தொழிநுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பைசர் மற்றும் மொடேனா தடுப்பூசிகளாகும்.

அதேபோல் வைரஸின் வெளிப்படையான புரோட்டின்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக், அஸ்டாசெனிகா மற்றும் ஜொன்சன் அன் ஜொன்சன் தடுப்பூசிகள். அதேபோல் கொரோனா வைரஸை பலமிழக்கச் செய்யும் வைரஸை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள சைனோபார்ம் மற்றும் சினோவெக்ஸ் தடுப்பூசிகள். இவற்றை பயன்படுத்தும் வேளையில் ஒவ்வொன்றும் தன்மைகளில் மாறுபட்டவை.

சைனோபார்ம் மற்றும் சினோவெக்ஸ் தடுப்பூசிகளை பயன்படுத்தும் வேளையில் முதலாம் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்கள் உரிய காலத்தில் இரண்டாம் தடுப்பூசியை ஏற்றியாக வேண்டும். அப்போதுதான் நோயெதிர்ப்பு சக்தி உருவாகும். 

ஆகவே முதலாம் தடுப்பூசியாக சைனோபார்ம் மற்றும் சினோவெக்ஸ் பெற்றுக் கொண்டவர்கள் உரிய காலத்தில் தடுப்பூசியை ஏற்றாவிட்டால் தடுப்பூசி ஏற்றியதில் பலனளிக்காது.

எனவேதான் எதிர்வரும் 8 ஆம் திகதியில் இருந்து சைனோபார்ம் தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களுக்கு முறையாக இரண்டாம் தடுப்பூசியை ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. மக்களும் மறக்காது தமக்கான இரண்டாம் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment