வடக்கு விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் விடாப்பிடி - ஜனாதிபதியுடனான கூட்டத்திலும் பிரதிபலித்தது - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

வடக்கு விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் விடாப்பிடி - ஜனாதிபதியுடனான கூட்டத்திலும் பிரதிபலித்தது

கொறோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவுபடுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (07.06.2021) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்களுடனான கலந்துரையாடலின்போதே, கடற்றொழில் அமைச்சரினால் குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டது.

குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்கனவே, 50,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக குறைந்தது ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தடுப்பூசிகளாவது அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார்.

அதேபோன்று, வவுனியா மாவட்டத்திற்கு குறைந்தது ஒரு இலட்சம் தடுப்பூசிகளையும், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு குறைந்தது தலா 50 ஆயிரம் தடுப்பூசிகளையாவது விரைவாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது, கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, கிடைக்கின்ற தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பாதிப்புக்களின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஏற்கனவே அமைச்சரவையில் உறுதியளிக்கப்படடது போன்று யாழ்ப்பாணத்திற்கான இரண்டாம் கட்டத் தடுப்பூசிகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியதன் அவசியத்தினை புரிந்து கொள்வதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, விரைவில் அதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad