மக்களின் நடமாட்டம் அதிகரிக்குமாயின் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மேலும் கால தாமதமாகலாம் : தொழிற்சாலை நிர்வாகத்தினரையும் வலியுறுத்தியுள்ள பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

மக்களின் நடமாட்டம் அதிகரிக்குமாயின் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மேலும் கால தாமதமாகலாம் : தொழிற்சாலை நிர்வாகத்தினரையும் வலியுறுத்தியுள்ள பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கொவிட் தொற்று பரவலை துரிதமாக கட்டுப்படுத்தக் கூடிய சூழல் தற்போது காணப்படுகிறது. எனினும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் மக்களின் நடமாட்டம் அதிகரிக்குமாயின் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மேலும் கால தாமதமாகும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த 15 நாட்களுக்கு முன்னரே நாளொன்றில் அதிகூடிய கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதனைத் தொடர்ந்தும் சுமார் 10 நாட்களின் பின்னர் மீண்டும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பதை அவதானிக்க முடிந்தது. எனினும் முன்னரைப் போன்று அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை.

அதற்கமைய கொவிட் பரவலை துரிதமாக கட்டுப்படுத்தக் கூடிய நிலைமை காணப்படுகிறது. எனினும் போக்குவரத்து கட்டுப்பாடுகளின் போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுமாயின் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படும்.

இந்நிலையில், தொழிற்சாலைகளில் தொற்றாளர்கள் இனங்காணப்படும்போது அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது. 

இதன்போது குறித்த நபர்களுக்கு தொற்றில்லை என்ற முடிவு கிடைக்கப் பெற்றால் அவர்களை உடனடியாக சேவைக்கு அழைப்பதாக தெரியவந்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் எம்மால் வெளியிடப்பட்டுள்ள ஆலோசனை வழிகாட்டல்களுக்கு முரணானவையாகும்.

காரணம் தொற்றாளர்களுடன் தொடர்பினைப் பேணியவர்களுக்கு ஆரம்பத்தில் தொற்று ஏற்படவில்லை என்ற முடிவு கிடைக்கப் பெற்றாலும், மீண்டும் தொற்று உறுதிப்படுத்தப்படக் கூடிய வாய்ப்புள்ளது. எனவே இவ்வாறு செயற்பட வேண்டாம் என்று நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் வலியுறுத்துகின்றோம் என்றார்.

இதன்போது சுகாதார அமைச்சின் குடும்பநல சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவிக்கையில்,

35 வயதுக்கு கூடிய கர்ப்பிணிகள், நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முன்னுரிமையளித்து தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கொவிட் கட்டுப்படுத்தல் சேவையில் ஈடுபட்டுள்ள கர்ப்பிணிகளுக்கும் முன்னுரிமையளிக்கப்படும். 

பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிகளால் இந்த தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படும். கொவிட் தடுப்பூசியினைப் பெற்றுக் கொண்டாலும் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாகவே செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad