விசாரணைகளிலிருந்து நீதிபதிகள் தொடர்ச்சியாக ஒதுங்குவதால் ரிஷாத்தின் பிணை மனு கேள்விக்குறி - உரிய கவனம் செலுத்தி அவருக்கு நியாயம் கிடைக்க வழி செய்யுங்கள் லக்ஷ்மன் கிரியெல்ல - News View

Breaking

Post Top Ad

Thursday, June 24, 2021

விசாரணைகளிலிருந்து நீதிபதிகள் தொடர்ச்சியாக ஒதுங்குவதால் ரிஷாத்தின் பிணை மனு கேள்விக்குறி - உரிய கவனம் செலுத்தி அவருக்கு நியாயம் கிடைக்க வழி செய்யுங்கள் லக்ஷ்மன் கிரியெல்ல

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் பிணை மனுத் தாக்கல் செய்திருந்தும் நீதிபதிகள் தொடர்ச்சியாக இந்த விசாரணையிலிருந்து ஒதுங்கி வருவதால் அவரால் பிணையில் செல்ல முடியாதுள்ளது. இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தி அவருக்கு நியாயம் கிடைக்க வழிசெய்யுமாறு எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, எமது எம்.பிக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும். 

ரிசாத் பதியுதீன் ஒரு கட்சித் தலைவர். அவர் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் எவரும் இவ்வாறு தடுத்து வைக்கப்படவில்லை.

மக்களின் அதிகாரத்தை பாராளுமன்றம்தான் நீதிமன்றங்களுக்கு வழங்கிறது. நாம் வழக்கு தீர்ப்புகளை விமர்சிக்கவில்லை. நீதிமன்ற தாமதம் குறித்தே பேசுகிறோம். 

இவர் பிணை மனு முன்வைத்துள்ளார். ஒவ்வொரு தடவையும் வழக்கு விசாரணையின் போது நீதிபதி ஒருவர் ஒதுங்குகிறார். 28 ஆம் திகதி வழக்கு விசாரணை நடைபெற்றது. 04 ஆம் திகதி நடந்தது. இன்றும் (நேற்று 23) விசாரணை நடந்தது. மூன்றாவது தடவையும் நீதவான் ஒருவர் விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ரிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் இருக்கிறார். அவருக்கு எதிராக எந்த சாட்சியும் கிடையாதென பாராளுமன்ற குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பி தற்போதைய பொலிஸ்மா அதிபர் அறிவித்திருந்தார்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அணுவளவு கூட அவருக்கு எதிராக சாட்சி கிடையாது. ஜனாதிபதி ஆணைக்குழுவில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் மறுபக்கம் அமர்ந்துள்ளனர். இது பாராளுமன்றத்திற்கும் வெட்கமான விடயமாகும். எம்.பிக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறேன் என்றார்.

இதனை சபாநாயகருக்கு அறிவிப்பதாக சபைக்கு தலைமை தாங்கிய எம்.பி குறிப்பிட்டார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad