சீன நிறுவனங்களை அமெரிக்கா அடக்க முயற்சிக்கிறது - குற்றம் சாட்டியுள்ள சீனா - News View

Breaking

Post Top Ad

Sunday, June 6, 2021

சீன நிறுவனங்களை அமெரிக்கா அடக்க முயற்சிக்கிறது - குற்றம் சாட்டியுள்ள சீனா

சீன நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை மூலமாக சீன நிறுவனங்களை அமெரிக்கா அடக்க முயற்சிப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதிலும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் 4 ஆண்டு கால பதவி காலத்தில் சீனாவுடனான அமெரிக்காவின் உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்தது.

வர்த்தகம், தென் சீன கடல் பிரச்சினை, உய்கூர் இன முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் கொரோனா வைரஸ் என பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நீடிக்கிறது.

முன்னதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சீனாவின் பல்வேறு செயலிகளுக்கு அப்போதைய ஜனாதிபதி தடை விதித்தார். இதனால் சீனாவின் பல நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

அதுமட்டுமின்றி சீன ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாக குற்றம் சாட்டி சீனாவின் 31 பெரு நிறுவனங்களின் பங்குகளை அமெரிக்க தொழிலதிபர்கள் வாங்குவதற்கு டிரம்ப் தடை விதித்தார். இதன் காரணமாக அந்த சீன நிறுவனங்களின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன.

இந்த நிலையில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் சீன நிறுவனங்களுக்கான தடைப்பட்டியலை அண்மையில் மதிப்பாய்வு செய்தது. அதன் முடிவில் மேலும் பல சீன நிறுவனங்களை இந்தப் பட்டியலில் சேர்த்து, தடை பட்டியல் விரிவுபடுத்தப்பட்டது.

அதன்படி ஏற்கனவே தடை பட்டியில் உள்ள நிறுவனங்களின் துணை நிறுவனங்கள் உட்பட மொத்தம் 28 சீன நிறுவனங்கள் புதிதாக இந்த தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தடை விதிக்கப்பட்ட சீன நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த 59 நிறுவனங்களிலும் அமெரிக்கர்கள் முதலீடு செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. ஜோ பைடன் நிர்வாகத்தின் இந்த புதிய அறிவிப்பால் சீன நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.‌

இந்த நிலையில் தங்கள் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் எனவும் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சந்தை சட்ட விதிமுறைகளை மீறும் செயல் என்றும் சீன நிறுவனங்களை அடக்குவதற்கான முயற்சி என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங்கி வெபின் கூறுகையில், ‘‘சீன நிறுவனங்களை அடக்கும் இந்த தடைப்பட்டியலை அமெரிக்கா உடனடியாக நீக்க வேண்டும்.‌ சீன நிறுவனங்களிடம் அமெரிக்கா நியாயமானதாக மற்றும் பாகுபாடற்றதாக இருக்க வேண்டும். சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை உறுதியுடன் பாதுகாக்க சீனா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்’’ என கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad