ஓட்டமாவடியில் அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட கொரோனா சடலத்திற்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி : 6 பேர் காயம் - News View

Breaking

Post Top Ad

Friday, June 4, 2021

ஓட்டமாவடியில் அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட கொரோனா சடலத்திற்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி : 6 பேர் காயம்

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் இன்று (05.06.2021) காலை 7.30 அளவில் இடம்பெற்ற விபத்தில் ஹட்டன் பொலிஸ் நிலைய சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.

வாகனத்தில் ஹட்டன் பொலிஸின் 4 அதிகாரிகளும், மேலும் 2 நபர்களும் மற்றும் சாரதியும் இருந்துள்ளனர்.

ஹட்டனில் இருந்து கண்டி இராணுவ முகாமில் ஒப்படைப்பதற்காக கொரோனா சடலத்தை கொண்டுசென்ற வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்க சென்ற 57 வயதான எஸ்.பெனடிக் என்ற பொலிஸ் அதிகாரியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த 79 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் ஓட்டமாவடியில் அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட இருந்துள்ளது.

குறித்த வேன் வாகனம் ஹட்டன் மற்றும் கினிகத்தேனைக்கு இடையில் 59 ஆவது கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

உப பொலிஸ் பொறுப்பதிகாரி பயணம் செய்த வாகனம் வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் உப பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 3 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வாகன சாரதி, சடலத்தை பொறுப்பேற்க வந்த உறவினர்கள் இருவர் ஆகியோர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரி கேகாலை பிரதேசத்தை சேர்ந்தவர் என அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதியில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக உப பொலிஸ் பொறுப்பதிகாரி பயணித்த வாகனம் வழுக்கி வீதியை விட்டு விலகி பள்ளளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் அட்டன் மற்றும் வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சடலம் கினிகத்தேனை பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad