19 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியை ஆரம்பகட்ட நஷ்டஈடாக கோரியுள்ளோம் - கரையோர பாதுகாப்பு அதிகார சபை - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

19 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியை ஆரம்பகட்ட நஷ்டஈடாக கோரியுள்ளோம் - கரையோர பாதுகாப்பு அதிகார சபை

(ஆர்.யசி)

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் ஏற்பட்டுள்ள சமுத்திர பாதிப்பை இலகுவில் சரி செய்ய முடியாது. இப்போது சமுத்திர பாதிப்பு குறித்த ஆய்வுகளை நாம் முன்னெடுத்துள்ள நிலையில் 19 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியை ஆரம்பகட்ட நஷ்டஈடாக கோரியுள்ளோம் என கரையோர பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷினி லஹந்தபுற தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்குள்ளானதில் இலங்கையின் கடல் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வுகளை கரையோர பாதுகாப்பு அதிகாரச சபை முன்னெடுத்துள்ள நிலையில், அதன் தற்போதைய நிலைமைகள் மற்றும் நட்டஈடு பெறுவது குறித்த சாதகத்தன்மைகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்குள்ளானதில் ஏற்பட்டுள்ள தாக்கமானது சாதாரணமாக கணிக்கக்கூடியது அல்ல. இதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளை சரி செய்ய நீண்ட காலம் எடுக்கும். கடலில் கப்பலொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

சில பொருட்கள் கடலில் கொட்டப்பட்டுள்ளதென சாதாரணமாக கருத்துக்களை கூறி செல்வதையே எம்மால் அவதானிக்க முடிகின்றது. ஆனால் இதன் தாக்கம் அடுத்த நீண்ட காலதிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். அதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளது. அதுமட்டுமல்ல கடலில் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் துண்டுகளை முழுமையாக அகற்றுவது இலகுவான காரியமல்ல.

கடலில் கலக்கப்பட்டுள்ள இந்த பிளாஸ்டிக் துண்டுகள் கடலில் சகல பகுதிகளுக்கும் செல்லும். அதுமட்டுமல்ல, இந்த கப்பலில் கொண்டுவரப்பட்ட அச்சுறுத்தலான பொருட்கள் என்னவென்பது இன்னமும் வெளிப்படவில்லை.

கப்பலின் 80 வீதமான பகுதி கடலில் மூழ்கியுள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமான கொள்கலன்கள் கடலில் மூழ்கியுள்ளன. அவற்றை அகற்றுவதற்கு எந்தவித முயற்சியும் எடுக்கப்படவில்லை. கப்பலில் எண்ணெய் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சில இரசாயன திரவியங்கள் கடலின் கீழ் தளத்தில் தரைகளில், கனியவள பாறைகளில் படியலாம். இது குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். எவ்வாறு இருப்பினும் இந்த விபத்தினால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை இலகுவில் சரி செய்ய முடியாது.

நட்டஈடு பெற்றுக் கொள்வது குறித்து தெரிவிக்கப்படுகின்றது. இதில் சமுத்திர பாதிப்பிற்கான நட்டஈட்டை மாத்திரமே எம்மால் கோர முடியும். இப்போது சமுத்திர பாதிப்பு குறித்த ஆய்வுகளை நாம் முன்னெடுத்துள்ள நிலையில் 19 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியை நட்டஈடாக கோரியுள்ளோம்.

இது ஆரம்பக கட்ட ஆய்வுகளின் பின்னர் அறிவிக்கப்பட்ட தொகையாகும். இது குறித்து சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம். எனினும் இந்த தொகை இறுதியான தொகை அல்ல. நிலைமைகள் மோசமாயின் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அது குறித்தும் எமது அறிவிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad