ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் பேரில் 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 23, 2021

ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் பேரில் 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் பேரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 16 பேருக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது. 

அவர்களில் 15 சிறைக் கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்தும் மற்றுமொருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்தும் இன்று விடுதலையாவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களைத் தவிர மேலும் 77 சிறைக் கைதிகள் நேற்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், 225 மரண தண்டனை கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் பேரில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறு குற்றங்களுக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 25 பேரும், தண்டப் பணத்தை செலுத்த முடியாது சிறைத் தண்டனை அனுபவித்து வந்த கைதிகள் 45 பேரும், இளம் குற்றவாளிகள் 07 பேரும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட 225 சிறைக் கைதிகளின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கிணங்க அவ்வாறு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் பெயர்ப் பட்டியல் நீதியமைச்சினால் ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad