மிகச்சிறிய நாடுகளின் உதவியை பெற வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது - பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ள சிவசேனா - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

மிகச்சிறிய நாடுகளின் உதவியை பெற வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது - பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ள சிவசேனா

கொரோனா 2ஆவது அலை தாக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்தும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மத்திய அரசால் சரியாக செய்யப்படாததால்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.

சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவில் கொரோனா பிரச்சினையை மத்திய அரசு கையாண்டது தொடர்பாக கட்டுரை ஒன்று எழுதப்பட்டுள்ளது. 

அதில் கூறியிருப்பதாவது இந்தியாவில் பரவும் கொரோனா உலகுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது என்று யுனிசெப் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

உலகில் பல நாடுகளும் இந்தியாவுக்கு தற்போது உதவிக் கொண்டு இருக்கின்றன. வங்காளதேசம் கூட 10 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகளை அனுப்பி உள்ளது. மிகச்சிறிய நாடுகளான பூட்டான், நேபாளம், மியன்மார், இலங்கை போன்றவையும் இந்தியாவுக்கு உதவுகின்றன.

மிகச்சிறிய நாடுகளின் உதவியை பெற வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பாகிஸ்தான், ருவாண்டோ, காங்கோ போன்ற ஏழை நாடுகள்தான் மற்ற நாடுகளிடம் இது போன்ற உதவிகளை பெற்றன.

இந்தியாவை தற்போது ஆளும் ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால் நாடு இந்த சூழ்நிலைக்கு இழுத்து செல்லப்பட்டுள்ளது.

இந்திய நாட்டை நேரு, காந்தி குடும்பத்தினர் சரியாக கட்டமைத்து வைத்திருந்தனர். முந்தைய பிரதமர்கள் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன்சிங் போன்ற தலைவர்கள் வளர்ச்சிகளை உருவாக்கினார்கள். அவர்களால்தான் இந்தியா வாழ்ந்து வருகிறது.

சிறிய நாடுகளின் உதவிகளையும் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை இருந்தும் புதிய பாராளுமன்றம் கட்டும் திட்டத்தை நிறுத்தி வைக்க பிரதமர் தயங்குகிறார். அதுதான் வளர்ச்சி என்று கருதுகிறார்.

கொரோனா 2ஆவது அலை தாக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்தும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் சரியாக செய்யப்படாததால்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்ததாக 3ஆவது அலை வரும் என்று எச்சரிக்கிறார்கள். ஆனால், இதை எல்லாம் கவலைப்படாமல் மம்தா பானர்ஜியை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே பாரதிய ஜனதா செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

மத்திய அரசு சிறந்த தேசிய அரசாக இருந்திருந்தால் அரசியல் ரீதியான நன்மை, தீமை பற்றி சிந்தித்து இருக்காது.

அனைத்து கட்சிகளையும் ஆலோசித்து நோயை வீழ்த்துவதற்கான வழிகளை கண்டறிந்து இருக்கும். தேசிய குழுவை அமைத்திருக்கும். ஆனால், இதை செய்யவில்லை.

பாரதிய ஜனதா எம்.பி. சுப்பிரமணியசாமி கூட, மத்திய சுகாதார அமைச்சரை மாற்றி விட்டு நிதின்கட்காரிக்கு அந்த பொறுப்பை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார். இது, மத்திய சுகாதார அமைச்சகம் தோல்வி அடைந்து இருப்பதை காட்டுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி அரசியல் ரீதியான சிந்தனைகளை விட்டுவிட்டு கடுமையாக உழைக்க வேண்டும். தேசியவாதத்தை பற்றி சிந்திக்க வேண்டும். அப்போதுதான் நோய் தொற்றில் இருந்து இந்தியாவை காப்பாற்ற முடியும் என அதில் எழுதப்பட்டுள்ளது.

இதற்கிடையே இங்கிலாந்து மருத்துவ பத்திரிகையான லான்சன்டில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் இந்திய அரசு கொரோனாவை தடுக்க சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேபோல் இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் மத்திய அரசு கொரோனா பிரச்சினையில் அலட்சியமாக இருந்து விட்டது என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment