நாட்டின் சவாலான சந்தர்ப்பங்களில் மக்கள் வங்கியின் பங்களிப்பு மகத்தானது : எதிர்காலம் குறித்து சிந்திப்பதனாலேயே பாரிய நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Friday, May 28, 2021

நாட்டின் சவாலான சந்தர்ப்பங்களில் மக்கள் வங்கியின் பங்களிப்பு மகத்தானது : எதிர்காலம் குறித்து சிந்திப்பதனாலேயே பாரிய நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை சமூகம் இதுவரை முகங்கொடுக்காத வகையிலான சவால்களை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் தேசிய பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு மகத்தான பங்களிப்பு செய்த மக்கள் மனமறிந்த வங்கி மக்கள் வங்கியை நாட்டு மக்கள் நேசிக்கின்றனர் என நிதியமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று (28) அலரி மாளிகையில் தெரிவித்தார்.

மக்கள் வங்கியின் புதிய தலைமை அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு காணொளி தொழில்நுட்பம் ஊடாக அலரி மாளிகையிலிருந்து கலந்து கொண்டபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

44 ஆண்டுகளாக சித்தம்பலம் கார்டினர் மாவத்தையில் அமைந்துள்ள அலுவலகம் மக்கள் வங்கியின் தலைமை அலுவலகமாக காணப்பட்ட நிலையில், தற்போது 100 வீதம் பசுமை கருத்திட்டத்தின் கீழ் 03 நிலக்கீழ் தளங்களையும் 23 தளங்களையும் கொண்ட புதிய தலைமை அலுவலகம் நவீன வசதிகளுடன் கூடியதாக கொழும்பு இப்பன்வல சந்திக்கு அருகே நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

அடிக்கல் நாட்டும் நிகழ்வில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நவீன தொழில்நுட்பம் ஊடாக அதன் நினைவு பலகையை திறந்து வைத்தார்.

இதன்போது பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு, மக்கள் வங்கியின் புதிய தலைமை அலுவலக கட்டிட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் மக்கள் மத்தியில் உரையாற்ற கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உங்களது அருகில் வராது தொலைவில் இருந்து உரையாற்றுவது ஏன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது முழு உலகமும் முகங்கொடுக்கும் இத்தொற்று நிலைமை காரணமாகும். முழு உலகமும் தொற்று நிலைக்கு முகங்கொடுத்திருப்பினும் நாம் நாட்டின் எதிர்காலம் குறித்து கொண்டுள்ள எதிர்பார்ப்புகளை கைவிடவில்லை.

இத்தொற்றை எதிர்கொள்ளும் அதேவேளை நாம் நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம். அவ்வாறு எதிர்காலம் குறித்து சிந்திப்பதனாலேயே இவ்வாறான பாரிய நிர்மாணப் பணிகள் இச்சந்தர்ப்பத்தில் ஆரம்பிக்கப்படுகின்றன.

உலகின் மிக மோசமான யுத்தத்திற்கு முகங்கொடுத்திருந்த சந்தர்ப்பத்திலும், நாம் நாட்டில் துறைமுகம், விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலை போன்றவற்றை அமைத்தோம். அதனால் இவ்வாறான சவால் மிகுந்த சந்தர்ப்பங்களிலும் பணிகளை இடைநிறுத்தாது முன்னெடுத்து செல்ல நாம் நன்கு பழக்கப்பட்டுள்ளோம்.

அதனால் இன்று நவீன வசதிகளுடன் கூடியதாக நிர்மாணிக்கப்படும் இக்கட்டிடம் 03 நிலக்கீழ் தளங்கள் மற்றும் 23 தளங்ளை கொண்டுள்ளதாக எனக்கு அறியக்கிடைத்தது. இதனை 100 சதவீதம் பசுமை கருத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

வங்கியுடன் தொடர்புபடாதிருந்த பொதுமக்களுக்காக தேசிய வங்கியொன்றை கட்டியெழுப்ப வேண்டிய தேவை அக்காலத்தில் ஏற்பட்டது.

1960 ஜுலை மாதம்  ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் பிரதமராகவிருந்த அரசாங்க காலப்பகுதியில் வர்த்தக, உணவு மற்றும் கப்பல்துறை அமைச்சராகவிருந்த டீ.பீ.இலங்கரத்ன அவர்களே மக்கள் வங்கி சட்டமூலத்தை சமர்ப்பித்தார்.

அச்சட்டம் 1961 மே 30 சட்டபூர்வமாக்கப்பட்டு, 1961 ஜூலை 1ஆம் திகதி மக்கள் வங்கியின் வணிக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. மக்கள் வங்கி ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம், அதுவரை ஒரு சில ஆங்கில மொழி பேசுபவர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த வங்கி முறை, சிங்கள மற்றும் தமிழ் பேசும் பெரும்பான்மை மக்களுக்கு திறக்கப்பட்டது. இதன் விளைவாக, நாடு முழுவதும் கிளைகளை நிறுவுவது துரிதப்படுத்தப்பட்டது.

அப்போதிருந்து இன்றுவரை மக்கள் வங்கி மக்களை நிதி ரீதியாக மேம்படுத்தியதுடன், நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களித்து ஆறு தசாப்தங்களில் நீண்ட தூரம் பயணித்துள்ளது.

இன்று, மக்கள் வங்கியின் 741 கிளைகள் மற்றும் சேவை மையங்கள் நாடு முழுவதும் உள்ளன. இது நாட்டின் மிகப்பெரிய கிளை வலையமைப்பாகும். 14 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய நிதி சேவை வழங்குநராக மக்கள் வங்கி விளங்குகிறது.

ஒரு பொறுப்புள்ள அரசு வங்கியாக, மக்கள் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நிதி வசதிகளை வழங்குவதில் மட்டுப்படுத்தப்படவில்லை. நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு அளித்த பங்களிப்பு அற்பமானது அல்ல. ஒரு அரச வங்கியாக, ஏற்றுமதி, கல்வி, சுகாதாரம், அதிவேக நெடுஞ்சாலைகள், வீதி, சுற்றுலா மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் நிதி உதவி வழங்குவதன் மூலம் கடந்த 60 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மக்கள் வங்கி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், சுனாமி, வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற இயற்கை பேரழிவுகளின் காலத்திலும், முப்பது ஆண்டு கால போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கும் இவ்வங்கி உதவியுள்ளது. 

குறிப்பாக கடந்த ஆண்டு, கொவிட்-19 நெருக்கடி காரணமாக இலங்கை சமூகம் இதுவரை முகங்கொடுத்திராத வகையிலான சவால்களை எதிர்கொண்டபோது, தேசிய பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு மக்கள் வங்கி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.

மக்கள் வங்கி இதுவரை 2.2 டிரில்லியன் ரூபாய் இருப்பை கொண்ட ஒரு பாரிய நிறுவனமாகும். இதன் மொத்த வைப்பு தொகை 1.8 டிரில்லியன் ஆகும். மேலும், கொவிட் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட கொந்தளிப்பான பொருளாதார சூழலில், 2020 ஆம் ஆண்டில் 14.2 பில்லியன் ருபாய் வரிக்கு பிந்தைய இலாபத்தை பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது. அரசுக்கு சொந்தமான வங்கியின் இலாபங்களில் பெரும்பாலானவை நாட்டின் வளர்ச்சிக்கே மீண்டும் ஈடுபடுத்தப்படுகின்றது.

நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த போதிலும், அவர்கள் மறந்த ஒரு விடயம் இருந்தது. அது நவீன வசதிகளுடனான ஒரு தலைமை அலுவலகத்தை நிர்மாணிக்கும் பணியாகும். தச்சருக்கு வீட்டில் நாற்காலி இல்லை என்பது போல, இத்தால் 44 ஆண்டு காலத்திற்கு முன்னர் திறக்கப்பட்ட கொழும்பு 02, சித்தம்பலம் எம். கார்டினர் மாவத்தையில் அமைந்துள்ள தலைமை அலுவலகமே இதுவரை மக்கள் வங்கியின் பாவனையில் உள்ளது. அக்கட்டிடம் அன்று கொழும்பு நகரில் அமைந்திருந்த நவீன கட்டிடம் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

அது 1977 ஜனவரி 22ஆம் திகதி அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது. மக்கள் வங்கிகிளை ஆரம்பிப்பதற்கு தலைமைத்துவம் வழங்கிய மற்றும் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களை நினைவுகூருவதற்கும் இதனை ஒரு சந்தர்ப்பமாக்கிக் கொள்கிறேன்.

மக்கள் வங்கி தற்போது டிஜிட்டல் அரங்கில் நுழைந்து நாட்டில் வங்கியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, இந்த மாபெரும் நிதி நிறுவனம் ஒரு அதிநவீன கட்டிடத்திற்குள் செல்ல முடிவெடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்நேரத்தில் மக்கள் வங்கி விளம்பரம் செய்ய முயற்சித்த விளம்பரம் எனக்கு நினைவிருக்கிறது. மக்கள் மனமறிந்த வங்கி மக்கள் வங்கி என்று கூறப்பட்டது. மக்கள் இன்னும் அந்த வார்த்தையை விரும்புகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் மக்கள் வங்கியின் பணிகள் அனைத்து வகையிலும் வெற்றி பெற வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன் என்று பிரதமர் கூறினார்.

குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், ஷெஹான் சேமசிங்க, பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன், மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, தலைமை நிர்வாக அதிகாரி ரஞ்சித் கொடிதுவக்கு உள்ளிட்ட மக்கள் வங்கியின் பணிப்பாளர் குழுவினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment