தொழிலாளர்களுக்கு தடை விதித்து, உரிமைகளை முடக்கி உயர் மட்டத்திலுள்ளவர்களை பாதுகாப்பதற்கான முதலாளித்துவ போக்கில் அரசாங்கம் - எதிரக்கட்சித் தலைவர் சஜித் - News View

Breaking

Post Top Ad

Sunday, May 2, 2021

தொழிலாளர்களுக்கு தடை விதித்து, உரிமைகளை முடக்கி உயர் மட்டத்திலுள்ளவர்களை பாதுகாப்பதற்கான முதலாளித்துவ போக்கில் அரசாங்கம் - எதிரக்கட்சித் தலைவர் சஜித்

எம்.மனோசித்ரா

சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதித்து அவர்களின் உரிமைகளை முடக்கி உயர் மட்டத்திலுள்ளவர்களை பாதுகாப்பதற்கான முதலாளித்துவ போக்கில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறான சூழலை மாற்றியமைக்கக்கூடிய பலம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே காணப்படுகிறது என்று எதிரக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் முகப்புத்தக நேரலையூடாக உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பொருளாதார வளர்ச்சியின் வேகம் உயர்வடையும் போது தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சி வேகமும் அதிகரிக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி முதலாளிமார்களின் கட்சியல்ல. இது நாட்டு மக்களுக்கான மக்களின் கட்சியாகும். தொழிலாளர்களின் கரங்களால் ஆட்சியைக் கைப்பற்றிய இந்த அரசாங்கம் அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு பதிலாக, அவர்களிடமிருந்து அதனைப் பறித்து முதலாளிமாருக்கே வழங்கியுள்ளனர்.

வரி நிவாரணம் ஊடாக முதலாளி வர்க்கத்தினருக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சலுகைகளினால் நாட்டுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாகவே தொழிலாளர்களுக்கு திருப்தியடைக்கூடிய வாழ்வாதாரம் கிடைக்கப் பெறாமலுள்ளது. 

இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு வலுவான அரசியல் தலைமைத்துவமே தேவையானதாகும். இவ்வாறான சூழலை உருவாக்கக்கூடிய வாய்ப்பு ஐக்கிய மக்கள் சக்திக்கு மாத்திரமே காணப்படுகிறது என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன். 

அரச அதிகாரம் கிடைத்தவுடன் தொழிலாளர்களை ஆட்சியாளர்களாக்குவதாகக் கூறினார்கள். ஆனால் தற்போது தடை விதித்து, தொழிலாளர்களின் உரிமையை முடக்கி அவர்களை புறந்தள்ளி நாட்டில் உயர் மட்டத்திலுள்ளவர்களை பாதுகாப்பதற்கான முதலாளித்துவ போக்கில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கிறது.

எமது ஆட்சியில் 3000 - 24000 வரை சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதோடு, தற்போதைய அரசாங்கத்தால் இல்லாமலாக்கப்பட்ட சம்பளமும் மீள வழங்கப்படும். அது மாத்திரமின்றி தற்போதைய சூழலுக்கு உகந்த சம்பள முறைமையை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கை எடுப்போம். 

நீக்கப்பட்டுள்ள ஓய்வூதிய கொடுப்பனவும் அவர்களது சம்பளத்திற்கு நிகராக வழங்கப்படும். இதேபோன்று தனியார் துறைகளில் தொழில் புரிபவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad