தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு முரணான விருந்துபசாரங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு : பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - News View

Breaking

Post Top Ad

Monday, May 3, 2021

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு முரணான விருந்துபசாரங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

(செ.தேன்மொழி)

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு முரணாக இடம்பெறுகின்ற மதுபான விருந்துபசாரங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு முரணான மதுபான விருந்துபசாரங்கள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கமைய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் நேற்றிரவு முதல் கண்காணிப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பின் போது விருந்துபசாரங்கள் இடம்பெறும் இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டால் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டவர்கள் , ஏற்பாடு செய்தவர்கள், விருந்துபசாரத்திற்கான இடவசிகளை செய்து கொடுத்தவர்கள் மற்றும் மதுபானத்தை விநியோகித்தவர்கள் என அனைவருக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறியமை தொடர்பில் நேற்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 4,857 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் கடற்கரை மற்றும் ஆற்றங்கரை பகுதிகளில் குளிப்பவர்கள் தொடர்பிலும், அந்த பகுதிகளில் காணப்படும் உணவு விற்பனை நிலையங்கள் தொடர்பிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது 1,093 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதோடு, 6,328 நபர்கள் கண்காணிக்கப்பட்டனர். அவர்களுள் 38 பேர் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்போது பாதுகாப்பற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 4,306 பேருக்கு சுற்றாடல் சட்டவிதிகள் தொடர்பில் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருந்தது.

கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமாக பரவலடைந்து வருகின்ற நிலையில் அதனை தடுக்கும் நோக்கத்திலே பொலிஸார் இது போன்ற சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள். இதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad