ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட சகலருக்கும் அடுத்த ஒரு சில வாரங்களில் வழக்கு தொடுக்கப்படும், சட்டமா அதிபருடன் இணைந்து பணியாற்ற 54 அதிகாரிகள் நியமனம் - அமைச்சர் சரத் வீரசேகர - News View

Breaking

Post Top Ad

Saturday, May 29, 2021

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட சகலருக்கும் அடுத்த ஒரு சில வாரங்களில் வழக்கு தொடுக்கப்படும், சட்டமா அதிபருடன் இணைந்து பணியாற்ற 54 அதிகாரிகள் நியமனம் - அமைச்சர் சரத் வீரசேகர

ஆர்.யசி

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட பிரதான நபர்களுக்கு வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய சந்தேக நபர்கள் சகலருக்கும் அடுத்த ஒரு சில வாரங்களில் சட்டமா அதிபரினால் வழக்கு தொடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்குகளை விரைவுபடுத்துவதற்காக சட்டமா அதிபருடன் இணைந்து பணியாற்ற குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவைச் சேர்ந்த 54 அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில் அரசாங்கம் பின்னிற்பதாக அரசியல் ரீதியில் பாரிய விமர்சனக் கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில், தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் விசாரணைகளை பின்னடிக்கவில்லை, தற்போதுள்ள நெருக்கடி நிலைமைகள் காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல இவ்வாறான திட்டமிடப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களை கண்டறிவது இலகுவான காரியம் அல்ல. எம்மை பொறுத்த வரையில் சகல குற்றவாளிகளையும் தண்டிக்க வேண்டும். ஒரு சிலர் இந்த விசாரணைகளில் இருந்து தப்பிப்பது எதிர்காலத்தில் மீண்டும் சிக்கலாக அமையலாம்.

எவ்வாறு இருப்பினும் பிரதான குற்றவாளிகள் என 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளன. அடுத்த சில வாரங்களில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட ஏனைய சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்யவுள்ளதாக சட்டமா அதிபர் எமக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் குறைபாடுகள் உள்ள விசாரணைக் கோப்புகளில் சுமார் 75 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டு சட்டமா அதிபர் அலுவலகதிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 சதவீத குறைபாடுகளும் பூர்த்தியான பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இந்த நடவடிக்கைகள் பூர்த்தியாகும்.

இதற்கிடையில், வழக்குகளை விரைவுபடுத்துவதற்காக சட்டமா அதிபருடன் இணைந்து பணியாற்ற குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவைச் சேர்ந்த 54 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

எவ்வாறு இருப்பினும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஈஸ்டர் தாக்குதல் குறித்த வழக்குகள் முழுமைப்படுத்தப்படும். குற்றவாளிகளை தண்டிக்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad