இலங்கையில் இன்று 1923 தொற்றாளர்கள் - 12 மாவட்டங்களில் 60 இற்கும் மேற்பட்ட பகுதிகள் முடக்கம் : கொரோனா முழு விபரம் - News View

Breaking

Post Top Ad

Monday, May 3, 2021

இலங்கையில் இன்று 1923 தொற்றாளர்கள் - 12 மாவட்டங்களில் 60 இற்கும் மேற்பட்ட பகுதிகள் முடக்கம் : கொரோனா முழு விபரம்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நாளாந்தம் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நாளொன்றில் 1800 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இன்றையதினமும் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. அதற்கமைய இதுவரையில் நாட்டில் 12 மாவட்டங்களில் பொலிஸ் பிரிவுகள், கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளிட்ட 60 இற்கும் மேற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை இதுவைர 1923 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 113676 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 98209 பேர் குணமடைந்துள்ளதோடு, 13894 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்
கடந்த வாரம் பிலியந்தல பொலிஸ் பிரிவு முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் நேற்று காலை 5 மணி முதல் பிலியந்தல பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டு, தொம்பே, பட்டகெதர வடக்கு, பெலன்வத்த மேற்கு மற்றும் கிழக்கு, கெஸ்பேவ தெற்கு, மாக்கந்தன கிழக்கு, மாவித்தர வடக்கு, மடபாத்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மாத்திரம் தனிமைப்படுத்தப்பட்டன.

இவை தவிர ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொரகாபிட்டி மற்றும் நாம்பமுனுவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மஹரகம பொலிஸ் பிரிவில் அரவ்வல வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று காலை 8.15 முதல் கொழும்பு - பாதுக்க பொலிஸ் பிரிவில் உக்கல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, களுத்துறை - பாணந்துறை பொலிஸ் பிரிவில் பின்வத்த, பின்வத்த மேற்கு, நாரம்பிட்டிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், பண்டாரகம பொலிஸ் பிரிவில் பண்டாரகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதே போன்று கம்பஹா - வத்தள பொலிஸ் பிரிவில் அல்விஸ்வத்த பிரதேசம், மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பொலிஸ் பிரிவில் திசவீரசிங்கம் சதுக்கம் கிராம உத்தியோகத்தர் பிரிவு, நுவரெலியா - ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவில் இரத்மெட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தபால் நிலையங்களுக்கு பூட்டு
நாற்பதுக்கும் மேற்பட்ட தபால் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கொம்பனித்தெரு, பாணந்துறை, வாழைத்தோட்டம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளின் பிரதான தபால் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டதையடுத்து 22 உப தபால் நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தபால் சேவைகள் இடம்பெற மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிருககாட்சிசாலைகளும் மூடப்பட்டன
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக தெஹிவலை தேசிய மிருககாட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம் , பின்னவல மிருக காட்சிசாலை மற்றும் ரிதியகம சவாரி பூங்கா உள்ளிட்டவை இன்று முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளிலுள்ள தொற்றாளர்களுக்கு தொலைபேசி இலக்கம்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்ந்தும் வீடுகளில் இருந்தால் அது தொடர்பில் அறிவிப்பதற்காக துரித தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1906 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அது தொடர்பில் அறிவிக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

தொழில் திணைக்களத்தில் மட்டுப்பாடுகள்
கொவிட்-19 தொற்று பரவலினைக் கருத்திற் கொண்டு தொழில் திணைக்களமானது தலைமை செயலகம் மற்றும் மாகாண, மாவட்ட தொழில் அலுவலகங்களுக்கு வருகை தரும் சேவை பெறுநர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. 

இதன் பிரகாரம் ஊழியர் சேமலாப நிதியத்தினைக் கோருவதற்கு தலைமை செயலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் தொழில் திணைக்களத்தின் இணையதளத்தில் பதிவு செய்து முன்கூட்டியே நேரமொன்றை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறன்று 9 மரணங்கள்
நேற்று ஞாயிறுக்கிழமை மேலும் 9 கொவிட் மரணங்கள் பதிவாகின. கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தை சேர்ந்த 94 வயதுடைய ஆண்னொருவரும், பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய ஆண்னொருவரும், லெவ்ல பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண்னொருவரும், தென்னகும்புர பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண்னொருவரும், மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய பெண்னொருவரும், மாலம்பே பிரதேசத்தை சேர்ந்த 87 வயதுடைய ஆண்னொருவரும், கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய ஆண்னொருவரும், வரகாமுர பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஆண்னொருவரும் , பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆண்னொருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இன்றையதினம் 13 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை 709 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad