ஸ்டெர்லைட் தயாரிக்கும் ஒக்சிஜனை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் : தமிழகத்துக்கு முன்னுரிமை அளிக்க முடியாது - இந்திய உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 27, 2021

ஸ்டெர்லைட் தயாரிக்கும் ஒக்சிஜனை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் : தமிழகத்துக்கு முன்னுரிமை அளிக்க முடியாது - இந்திய உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஸ்டெர்லைட் தயாரிக்கும் ஒக்சிஜனை மத்திய தொகுப்புக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க இயலாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமான வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், “ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் உற்பத்தி செய்து தர தயார்” என்று தெரிவித்தது.

அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், “ஒக்சிஜன் தேவை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்க வேண்டும்” என்று கூறியது. 

இதைத்தொடர்ந்து நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஸ்டெர்லைட் ஆலையை ஒக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் 4 மாதங்கள் இயக்க அனுமதிக்கலாம் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் எந்த காரணத்தை கொண்டும் வேறு எந்த பணிகளும் நடக்கக்கூடாது என்று அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை ஒக்சிஜன் உற்பத்திக்காக திறக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு அதை கண்காணிக்க தூத்துக்குடி கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஒக்சிஜனை தமிழகத்தின் தேவைக்கு போகவே மற்ற மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

நேற்று நடந்த கூட்டத்தில் இவை தீர்மானங்களாக கொண்டு வரப்பட்டன. இந்த தீர்மானம் பிரமாண பத்திரமாக தயாரிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் அந்த பிரமாண பத்திரத்தை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எல்.நாகேஸ் வரராவ், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இந்த விசாரணை நடத்தியது.

அப்போது வேதாந்தா நிறுவனம் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் ஒக்சிஜன் தயாரித்து வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் பிரமாண பத்திரமும் ஆய்வு செய்யப்பட்டது.

தமிழக அரசு 2 கோரிக்கைகளை முக்கியமாக தெரிவித்து உள்ளது. ஒன்று ஸ்டெர்லைட் ஆலையில் வேறு எந்த பணிகளும் நடக்க கூடாது. 2வது ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஒக்சிஜனை தமிழகத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் முதலில் தர வேண்டும் என்று கூறி உள்ளது.

வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் ஆஜரான சட்டத்தரணி வாதாடும் போது கூறியதாவது ஸ்டெர்லைட் ஆலையின் மீது முழு நம்பிக்கை இல்லை. அந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசு அடைந்துள்ளது. தூத்துக்குடியில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள இடங்களில் சுற்றுச்சூழல் மாசு அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனம் ஒக்சிஜன் உற்பத்தியை தவிர வேறு எந்த பணியிலும் ஈடுபடக்கூடாது. இதை அரசு அமைக்கும் குழு கண்காணிக்கும். இந்த குழுவில் மாவட்ட கலெக்டர், பொலிஸ் சூப்பிரண்ட், அந்த பகுதி மக்கள் ஆகியோர் இடம் பெறுவார்கள்.

இந்த குழு சம்பந்தப்பட்ட ஆலையையும், அங்கு ஒக்சிஜன் மட்டும்தான் தயாரிக்கப்படுகிறதா? என்பதையும் கண்காணிக்கும் என்றார்.

இதற்கு வேதாந்தா நிறுவன சட்டத்தரணி ஆட்சேபம் தெரிவித்தார். அவர் வாதிடும்போது, “கண்காணிப்பு குழுவில் ஆலை பகுதி மக்கள் இடம் பெறக்கூடாது. ஏற்கனவே அந்த பகுதி மக்களால் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்துள்ளோம்” என்றார்.

அதை கேட்ட நீதிபதிகள், “கண்காணிப்பு குழுவில் அரசு அதிகாரிகள், நிபுணர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை இடம்பெற செய்யலாமே. அந்த குழுவினர் உள்ளூர் குழுவில் உள்ளூர் பகுதி மக்களும் இடம்பெற வேண்டும்” என்று வற்புறுத்தினர்.

ஆனால் மத்திய அரசு சார்பில் வாதிட்ட சட்டத்தரணி, “வேதாந்தா நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு ஆதரவாக வாதிட்டார். கண்காணிப்பு பகுதி மக்களிடம் பேசட்டுமே என்று யோசனை தெரிவித்தனர்.

மேலும் அந்த பகுதியில் நிலவும் கடினமான சூழல் தவிர்க்கப்பட வேண்டும்” என்றும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

தொடர்ந்து வாதிட்ட மத்திய அரசு சட்டத்தரணி கண்காணிப்பு குழுவில் உள்ளூர் பகுதி மக்கள் இடம்பெற தேவையில்லை” என்றார்.

அதைத் தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசு சட்டத்தரணி, “கண்காணிப்பு குழுவில் உள்ளூர் மக்களும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால் வாக்கு எண்ணிக்கை நேரத்தில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள். அந்த நேரத்தில் தேவையில்லாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை விரும்பவில்லை.

கண்காணிப்பு குழுவில் யார்யார் இடம் பெற வேண்டும் என்பது பற்றி நீதிமன்றம் உத்தரவிடலாம்” என்றார்.

அடுத்து ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒக்சிஜன் தங்களுக்கே சொந்தம் என்பதில் மத்திய அரசும், தமிழக அரசும் சொந்தம் கொண்டாடியது.

தமிழக அரசு சட்டத்தரணி வாதிடும்போது, “உற்பத்தி செய்யும் ஒக்சிஜனை முன்னுரிமை அடிப்படையில் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். மாநிலத்தின் தேவைக்கு போக மீதியை மற்ற மாநிலங்களுக்கு வழங்கலாம்” என்றனர்.

ஆனால் மத்திய அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. “ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒக்சிஜனுக்கு தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க முடியாது. உற்பத்தி செய்யப்படும் ஒக்சிஜனை மத்திய அரசிடம் வழங்க வேண்டும். தமிழகம் உட்பட ஒவ்வொரு மாநிலத்திலும் தட்டுப்பாட்டை அறிந்து மத்திய அரசே பிரித்து வழங்கும்” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ஆலையின் நிர்வாகம், இயக்கம் ஆகியவை அரசின் கண்காணிப்பில் இருக்கலாம். ஆனால் பிற மாநிலங்களுக்கு ஒக்சிஜன் வழங்கு வதை தடுக்கக்கூடாது.

ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஒக்சிஜன் மத்திய அரசிடமே வழங்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு உள்ளது” என்றனர்.

வேதாந்தா குழுமம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வாதிடும் போது, “அனுமதி கொடுத்ததும் 10 நாட்களில் ஒக்சிஜன் உற்பத்தியை தொடங்க தயாராக உள்ளோம்” என்றார்.

அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் உற்பத்திக்காக திறப்பதற்கு அனுமதிக்கிறோம்.

ஒக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும். இந்த குழுவை தேசிய சுற்றுச்சுழல் பொறியியல் ஆய்வு மையம் தேர்வு செய்யும்.

மேற்பார்வை குழுவில் உள்ளூர் மக்கள் 2 பேரை இடம்பெற செய்யலாம். இது தொடர்பாக தமிழக அரசுடன் ஆலோசித்து உள்ளூர் மக்களை குழுவில் இணைத்து கொள்ளலாம்.

உற்பத்தி செய்யப்படும் ஒக்சிஜனை மத்திய தொகுப்புக்கு வழங்க வேண்டும். தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க இயலாது. மாநிலங்களுக்கு தேவையான அளவை மத்திய அரசே முடிவு செய்யும். மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப மத்திய அரசே பிரித்து அளிக்கும்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. இது ஒக்சிஜன் உற்பத்திக்காக மட்டும்தான். வேதாந்தா குழுமத்தின் வேறு எந்த ஆதாயத்துக்காகவும் அல்ல.

ஒக்சிஜன் தயாரிப்புக்கு தேவையான மின்சாரத்தை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். ஆலைக்குள் செல்பவர்கள் விபரங்களை வேதாந்தா நிறுவனம் கண்காணிப்பு குழுவிடம் தெரிவிக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad