சீன தடுப்பூசிகள் அரசியல் அனுமதியுடனேயே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கவில்லை என்கிறார் ராஜித சேனாரத்ன - News View

About Us

About Us

Breaking

Thursday, April 1, 2021

சீன தடுப்பூசிகள் அரசியல் அனுமதியுடனேயே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கவில்லை என்கிறார் ராஜித சேனாரத்ன

(எம்.மனோசித்ரா)

சீனாவில் தயாரிக்கப்படும் சைனோபார்ம் தடுப்பூசிகளுக்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் அனுமதி வழங்கப்படவில்லை. அரசியல் அனுமதியுடனேயே அவை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. எனவே சைனோபார்ம் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குவது பொறுத்தமானதல்ல என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், சீன தடுப்பூசிகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்ட தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் அதனை தயாரிக்கும் நிறுவனத்திடம் பல கேள்விகள் ஊடாக தெளிவுபடுத்தல்கள் கோரப்பட்டிருந்தன.

எனினும் கேட்கப்பட்ட கேள்விகளில் பெருமளவானவற்றிற்கு பதில் வழங்கப்பட்டிருக்கவில்லை. எனவேதான் இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு தொடர்பில் தம்மால் உறுதிப்படுத்த முடியாது என தெரிவித்து மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் அதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது.

எனினும் இவ்விடயத்தை கவனத்திற் கொள்ளாமல் சீன தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. உலக சுகாதார ஸ்தாபனத்தினாலும் இதுவரையில் சீன தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இவ்வாறானதொரு நிலையில் இதனை பொதுமக்களுக்கு வழங்குவது பொறுத்தமானதல்ல. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனில் இந்த தடுப்பூசி வழங்கப்படக் கூடாது.

தடுப்பூசிகள் தொடர்பில் ஆராய்வதற்கு 8 பேர் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ள போதிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே தீர்மானங்களை எடுக்கின்றார். மருத்துவத்துறையுடன் தொடர்புடைய விடயங்களுக்கு அரசியல் ரீதியில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் பொறுத்தமற்றவை.

எனவே இவ்விடயம் தொடர்பில் நாம் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்புவதோடு, நேரடியாக மக்களிடம் சென்று தெளிவுபடுத்துவோம்.

இவ்வாறான அரசியல் தலையீடுகளின் காரணமாகவே புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறுகள் அடங்கிய தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் சகாக்கள் இந்த சர்ச்சைக்குரிய எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளதால் இது தொடர்பில் அரசாங்கம் தெளிவாக எந்த விடயத்தையும் கூறாமலுள்ளது.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்கள் தேங்காய் எண்ணெய்யை கொள்வனவு செய்ய அஞ்சுகின்றனர். இதன் காரணமாக தரமான தேங்காய் எண்ணெய் விற்பனையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment