துறைமுக நகர திட்டம் தொடர்பில் அச்சப்படுவதற்கு எதுவுமில்லை, கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றில் நியாயங்களை கூறி வெளியில் வரலாம் - காதர் மஸ்தான் - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 27, 2021

துறைமுக நகர திட்டம் தொடர்பில் அச்சப்படுவதற்கு எதுவுமில்லை, கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றில் நியாயங்களை கூறி வெளியில் வரலாம் - காதர் மஸ்தான்

எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல துறைமுக நகர திட்டம் தொடர்பில் அச்சப்படுவதற்கு எதுவுமில்லை. எங்கள் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பாக அமையும் எந்தவிடயத்தினையும் நாம் ஆதரிக்கமாட்டோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் கொழும்பு துறைமுக நகரம் பற்றி ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பாக அமையும் எந்த விடயத்தினையும் நாம் ஆதரிக்கமாட்டோம். எனினும் இது தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எமக்கு தெளிவூட்டப்பட்டுள்ளது. இதனால் 80 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது. அதிகமான அந்நிய செலாவணிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மலேசியா உட்பட இன்னும் பல நாடுகளில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது ஒருபாதிப்பிற்குரிய விடயமல்ல. அதன் வரைபுகள் தற்போது உயர் நீதிமன்றில் இருக்கிறது. அவை திருத்தப்பட்டு வந்தால் மக்களிற்கு பாதிப்பில்லாத ஒரு நிலையில் இருக்கும் என எமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல அச்சப்படுவதற்கு எதுவுமில்லை.

இதேவேளை இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று அந்த சமூகத்தினுடைய மதத் தலைவர் அறிக்கை விடுகின்றார். அது தொடர்பாக சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பலர் கைது செய்யப்படுகின்றார்கள். 

எனினும் கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றில் அவர்களது நியாயங்களை கூறி அதில் தொடர்பில்லாதவர்கள் வெளியில் வரலாம். பாராளுமன்றில் பேசுவதனாலேயே இந்த கைதுகள் நடக்கின்றது என்ற எதிர்க்கட்சிகளின் கருத்தினை ஏற்க முடியாது என்றார்.

ஓமந்தை விஷேட நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad