நாட்டில் கொவிட் பரவலால் ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுக்க அரசாங்கம் அனைத்து பிரிவுகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது - அமைச்சர் கெஹெலிய - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 27, 2021

நாட்டில் கொவிட் பரவலால் ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுக்க அரசாங்கம் அனைத்து பிரிவுகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது - அமைச்சர் கெஹெலிய

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் பரவலால் ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் அனைத்து பிரிவுகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது. அத்தோடு பிரதேச வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக வசதிகளை அதிகரிப்பதற்கும், ஏனைய வைத்தியசாலைகளில் ஒட்சிசன் அளவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொவிட் பரவலால் இலங்கையில் அவசரநிலை ஏற்படுமளவிற்கு நிலைமை தீவிரமடையும் நிலைக்கு கொண்டு செல்ல நாம் எதிர்பார்க்கவில்லை.

எவ்வாறிருப்பினும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுப்பதற்கு சகல தரப்பினரும் தயார் நிலையிலுள்ளனர். கொவிட் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு முழுமையான முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம்.

அத்தோடு இது நாட்டு மக்களுக்கு சிறந்த பாடமாகும். இவ்வாறான நிலைமைகளை தவிர்த்துக் கொள்வதற்கு பொறுப்புள்ளவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் கட்டுப்பாடுகளை விதித்திருந்தால் இவ்வாறான நிலைமை ஏற்படாமல் தவிர்த்திருக்க முடியும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம்.

எவ்வாறிருப்பினும் மக்கள் பொறுப்புடன் நடப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. எனவே நிலைமையைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பும் இன்றியமையாததாகும்.

அறிவுடைய மக்கள் பொது போக்குவரத்திலும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவார்கள். அவ்வாறில்லை எனில் சட்டங்களை நடைமுறைப்படுத்தி அதன் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment