மார்க்க கடமைகளுடன் முடங்கிவிடாமல் மக்களுக்காக பணியாற்றிய ஆயர் - இதில் உலமாக்களுக்கும் படிப்பினைகள் உள்ளது - News View

Breaking

Post Top Ad

Thursday, April 1, 2021

மார்க்க கடமைகளுடன் முடங்கிவிடாமல் மக்களுக்காக பணியாற்றிய ஆயர் - இதில் உலமாக்களுக்கும் படிப்பினைகள் உள்ளது

மன்னார் மறை மாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.

யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் பிரபாகரனின் பெயர் உச்சரிக்கப்படுகின்றதோ, இல்லையோ, ஆனால் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் பெயர் ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

தான் ஒரு கிறிஸ்தவ சமய தலைவர் என்ற வரையறைக்குள் ஒதுங்கிக் கொண்டு மார்க்க கடமைகளுடன் மட்டும் முடங்கி விடாமல், அரசியல் தலைவர் போன்று தன்னை சுற்றியுள்ள பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக தொடர்ந்து துணிச்சலுடன் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.

புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் அப்போது அடிக்கடி விமான குண்டுத் தாக்குதல்கள், எறிகணை தாக்குதல்கள் நடைபெறுவது வழமை.

அவ்வாறான தாக்குதல்கள் மூலம் அப்பாவி மக்களுக்கு ஏற்படுகின்ற சேதங்களை அரசாங்கம் மூடிமறைக்க முற்படுகின்றபோது அதனை ஆயர் அவர்கள் உலகுக்கு வெளிப்படுத்தி வந்தார்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், அப்பாவி ஏழைகளுக்காகவும், நீதிக்காகவும், மனித உரிமைக்காகவும் இவர் துணிச்சலுடன் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததனால் இவரை சர்ச்சைக்குரிய ஆயர் என்றும், இலங்கைக்கு எதிரானவர் என்றும், புலிகளுக்கு ஆதரவான பிரிவினைவாதி என்றும் சிங்கள பத்திரிகைகள் குறிப்பிட்டிருந்தன.

சர்வதேசத்துடனும், வத்திக்கானுடனும் நேரடி தொடர்பில் இருந்ததுடன், விடுதலை போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு கொண்டு சென்றவர்களில் இவரும் ஒருவர்.

இவரது மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பாகும். ஆனாலும் இவரது பெயர் என்றும் தமிழ் மக்களின் மனங்களிலிருந்து மறையப்போவதில்லை.

இஸ்லாமிய மார்க்க தலைவர்களும், உலமாக்களும் அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களுக்கு ஆசைப்படாமலும், சலுகைகளுக்கு அடிபணியாமலும், மார்க்கத்துடன் மாத்திரம் முடங்கி விடாமலும் இவர்போன்று துணிச்சலுடன் மக்களுக்கான அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தால் அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments:

Post a Comment

Post Bottom Ad