மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீழ்த்த முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சிகள் தற்போதும் தொடர்கிறது - சாகர காரியவசம் - News View

Breaking

Post Top Ad

Friday, April 2, 2021

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீழ்த்த முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சிகள் தற்போதும் தொடர்கிறது - சாகர காரியவசம்

(இராஜதுரை ஹஷான்)

2014 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீழ்த்த முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சிகள் தற்போதும் தொடர்கிறது. எதிர்த்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு சாதகமான வகையில் ஆளும் தரப்பின் அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் கருத்துரைப்பது அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் அவர்களது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் கொழும்பில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தை பலவீனப்படுத்த திட்டமிட்ட வகையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமாக பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அக்குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.

கடந்த காலங்களில் சுற்றுச்சூழல் அழிப்பு விவகாரம் பிரதான பேசுபொருளாக காணப்பட்டது. பிற நாடுகளில் இடம்பெற்ற காடழிப்பு படங்களை காண்பித்து அரசாங்கத்துக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

சீனி வரிக் குறைப்பினால் ஏற்பட்ட நட்டத்தை மோசடி என குறிப்பிட்டு எதிர்த்தரப்பினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். எதிர்த்தரப்பினரது இக்குற்றச்சாட்டுக்கு சாதகமாக ஆளும் தரப்பின் அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் கருத்துரைத்தார்கள். அரசாங்கத்தை ஏதாவது ஒரு வழியில் பலவீனப்படுத்த வேண்டும் என்பது இவர்களின் நோக்கம் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தற்போது இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் விவகாரம் அரசியல் களத்தில் சூடு பிடித்துள்ளது. இவ்விடயத்தில் அரசாங்கம் எதனையும் மறைக்கவில்லை. தேங்காய் எண்ணெய்யில் நச்சுப் பதார்த்தம் கலக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கமே வெளிப்படுத்தியது. இம்மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பகிரங்கமாக அறிவித்துள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீழ்த்த 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ஆளும் தரப்பினர் உறுப்பினர்களும் எதிர்த்தரப்பிற்கு சார்பாக செயற்பட்டு 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். நல்லாட்சி அரசாங்கத்தினால் நாட்டு மக்கள் பயன்பெறவில்லை.

பெரும்பாலான மக்களின் கோரிக்கைக்கு அமைய 2016 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தோற்றம் பெற்றது. 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இருந்து நாட்டு மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தை தோற்றவித்த அரசியல் தவறை திருத்திக் கொண்டார்கள். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளார்கள். சுபீட்சமான எதிர்கால கொள்கைத் திட்டம் முறையாக செயற்படுத்தப்படுகிறது. 

அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அனைத்து சவால்களையும் வெற்றி கொள்ள முடியும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும் அதற்கு பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad