எதிர்க்கட்சித் தலைவர் தனது சுய மரியாதையை பாதுகாத்துக் கொள்ள ரஞ்சனின் விவகாரத்தை மறந்துவிட வேண்டும் - எஸ்.பி. திஸாநாயக்க - News View

Breaking

Post Top Ad

Thursday, April 8, 2021

எதிர்க்கட்சித் தலைவர் தனது சுய மரியாதையை பாதுகாத்துக் கொள்ள ரஞ்சனின் விவகாரத்தை மறந்துவிட வேண்டும் - எஸ்.பி. திஸாநாயக்க

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சர்வதேச நீதிமன்றத்தை நாடுவது பயனற்றது. அவர் நீதிமன்றத்தை அவமதித்தமை பல்வேறு சாட்சியங்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே எதிர்க்கட்சித் தலைவர் தனது சுயமரியாதையினை பாதுகாத்துக் கொள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை விவகாரத்தை இனியாவது மறந்துவிட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையினை பாதுகாக்க எதிர்க்கட்சியினர் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தனர்.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே சபாநாயகர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாகும் என அறிவித்தார். இவ்விடயத்தை கொண்டு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றில் அசாதாரண சூழ்நிலையினை ஏற்படுத்துகிறார்கள்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறை சென்றுள்ளமைக்கும், அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை அரசியல் பழிவாங்கள் என கூறுவதை எதிர்த்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது அரச அதிகாரத்தை பயன்படுத்தி நீதிமன்ற செயற்பாடுகளில் இவர் அநாவசியமான முறையில் தலையிட்டுள்ளார். நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமையால் தற்போது தண்டிக்கப்பட்டுள்ளார். 

செய்த தவறை திருத்திக் கொள்ள அவர் எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை. இவரது முறையற்ற செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு தரப்பினர் குறுகிய தேவைக்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.

பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோனதற்கு நீதியை பெற்றுக்கொள்ள சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக எதிர்த்தரப்பினர் கூறுகின்றனர்.

இவ்விடயத்திற்கு சர்வதேச நீதிமன்றம் செல்வது என்று குறிப்பிடுவது எதிர்த்தரப்பினரது நிலையினை எடுத்துக்காட்டுகிறது. நீதித்துறையை அவமதிப்பதை சர்வதேச நீதிமன்றம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

எதிர்க்கட்சித் தலைவர் தனது சுய மரியாதையை பாதுகாத்துக் கொள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்துவதை கைவிட வேண்டும். நீதிமன்றத்தை ரஞ்சன் ராமநாயக்க அவமதித்தமை பல்வேறு சாட்சியங்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad