குடும்ப பிரச்சினையை தீர்க்கச் சென்ற மாமனார் பலி : தந்தை, மகனுக்கு விளக்கமறியல் - மட்டக்களப்பில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 27, 2021

குடும்ப பிரச்சினையை தீர்க்கச் சென்ற மாமனார் பலி : தந்தை, மகனுக்கு விளக்கமறியல் - மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு நகர் பகுதியில் குடும்ப உறவினரின் குடும்ப பிரச்சினையை தீர்ப்பதற்கு சென்றவரை தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தந்தையையும் 15 வயதுடைய மகனையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுவனை சிறுவர் சீர்திருத்த சிறைச்சாலையில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை (26) உத்தரவிட்டார்.

ஏறாவூர் ஆறுமுகதான்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தரான தம்பிப்பிள்ளை மனேகராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு இரண்டாம் குறுக்கு வீதியிலுள்ள அவரது சகோதரியின் மகளின் குடும்பமான கணவன் மனைவிக்குள் ஏற்பட்டுள்ள குடும்ப பிரச்சினையை தீர்ப்பதற்காக சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (25) திகதி பகல் 2 மணியளவில் குறித்த வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தபோது அதனை 15 வயதுடைய அவர்களின் மகன் கையடக்க தொலைபேசியில் உயிரிழந்தவரை வீடியோ எடுத்ததையடுத்து உயிரிழந்தவர் அந்த சிறுவனின் கையடக்கத் தொலைபேசியை பறித்து அவனின் கன்னத்தில் அடித்துள்ளார்.

இதனையடுத்து தனது மகனை அடித்ததையடுத்து கோபமடைந்து உயிரிழந்தவரை தந்தையும் மகனும் சேர்ந்து அடித்து தாக்கி தள்ளியுள்ளனர்.

இதனையடுத்து தாக்கியவர்களை உறவினர்கள் விலக்கிய பின்னர் அவரை பார்த்தபோது மூச்சின்றி கிடந்ததையடுத்து அவரை உடன் அருகிலுள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்தை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேதபரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இதனிடையே சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தந்தையையும் 15 வயது மகனையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜயர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுவனை சிறுவர் சீர்திருத்த சிறைச்சாலையில் வைக்குமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கேசரி

No comments:

Post a Comment