தேர்தல் ஆணைக்குழுவின் அவதானம் வரவேற்கத்தக்கது - பெப்ரல் அமைப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, April 2, 2021

தேர்தல் ஆணைக்குழுவின் அவதானம் வரவேற்கத்தக்கது - பெப்ரல் அமைப்பு

(எம்.மனோசித்ரா)

பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளில் இன அல்லது மத ரீதியிலான பெயர்களைக் கொண்ட கட்சிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது. இவ்வாறான கட்சிகள் அதன் பெயர்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையானது ஜனநாயத்தை மேம்படுத்தும் செயற்பாடாகும் என்று பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பெப்ரல் அமைப்பினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் பூஞ்சிஹேவாவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மதம் அல்லது இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பெயர்களைக் கொண்டுள்ள கட்சிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளமையை பெப்ரல் அமைப்பு வரவேற்கிறது. 

அத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல்கள் கட்சிகளின் உத்தியோகபூர்வ பெயர் இனம் அல்லது மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்திருக்குமாயின் அவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கால வரையறை வழங்கப்பட்டுள்ளமையை ஜனநாயகம் தொடர்பான சிறந்த நடவடிக்கையாக நாம் பார்க்கின்றோம்.

வெவ்வேறு தேவைகளுக்காக சமூகத்தில் தோற்றுவிக்கப்பட்ட இன ரீதியானதும் மத ரீதியானதுமான பிரிவினையால் 3 தசாப்தங்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். எனவே இன அல்லது மத ரீதியாக உருவாக்கப்படும் எந்தவொரு விடயத்திற்கும் சமூகத்தில் இடமளிக்காமலிருக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது.

இதேபோன்று அரசியல் கட்சிகள் அரசியல் தேவைகளுக்காக அன்றி வியாபாரத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான கட்சிகளால் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. எனவே கட்சிகளை பதிவு செய்வதற்கான நிபந்தனைகள் தொடர்பில் மீள அவதானம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

அத்தோடு தொடர்ச்சியாக தேர்தல்களில் போட்டியிடாத கட்சிகள், நேரடியாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடாத கட்சிகள் தொடர்பில் வருடாந்தம் அல்லது குறிப்பிட்ட சில வருடங்களுக்கொருமுறையேனும் மதிப்பீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad