தடையை எதிர்த்து நீதிமன்றை நாடும் முஸ்லிம் அமைப்புக்கள் - திங்களன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்ய ஏற்பாடு - News View

About Us

About Us

Breaking

Friday, April 30, 2021

தடையை எதிர்த்து நீதிமன்றை நாடும் முஸ்லிம் அமைப்புக்கள் - திங்களன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்ய ஏற்பாடு

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ், இலங்­கையில் தடை செய்யப்பட்­டுள்ள முஸ்லிம் அமைப்­புக்­களில் பல, தடையை எதிர்த்து உயர் நீதி­மன்றில் வழக்குத் தொடுக்க தீர்­மா­னித்­துள்­ளன. 

அதன்­படி, அண்­மையில் தடை செய்­யப்­பட்ட 11 அமைப்­புக்­களில் உள்­ள­டங்கும் ஐந்து அமைப்­புக்கள் எதிர்­வரும் வாரம் வரை உயர் நீதிமன்றில் தனித் தனி­யாக அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை தாக்கல் செய்ய முடி­வெ­டுத்­துள்­ளன.

அதன்­படி எதிர்­வரும் மூன்றாம் திகதி திங்­க­ளன்று சி.டி.ஜே எனும் சிலோன் தெளஹீத் ஜமாஅத் அமைப்பு முதல் மனுவை தாக்கல் செய்ய­வுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. 

ஐக்­கிய தௌஹீத் ஜமாஅத் (யூ.டி.ஜே.), ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் (எஸ்.எல்.டி.ஜே.) ஆகிய அமைப்­புக்­களும், ஜம்­மி­யதுல் அன்­ஸாரி சுன்னதுல் மொஹ­ம­தியா (ஜே.ஏ.எஸ்.எம்.) அமைப்பும் தமது தடையை சவா­லுக்கு உட்­ப­டுத்தி வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

நாட்டின் சமா­தா­னத்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு, பொது­மக்கள் ஒழுங்கு மற்றும் சட்­ட­வாட்­சியின் நலனில் அர­சாங்­கத்தின் முயற்­சி­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக அடிப்படைவாதத்­துடன் தொடர்­பு­டைய 11 அமைப்­பு­களை தடை செய்­வ­தாக கடந்த 13 ஆம் திகதி அதி­வி­சேட வர்த்­த­மா­னியை வெளியிட்டு அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாதத் தடுப்பு (தற்­கா­லிக ஏற்­பா­டுகள்) சட்­டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் 2021 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஒழுங்கு விதி­க­ளுக்­க­மைய குறிப்­பிட்ட 11 அமைப்­பு­களும் தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக வர்த்­த­மானி அறி­வித்­தலில் சுட்டிக்காட்டப்­பட்­டுள்­ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகள்

ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ)

சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ)

சிறீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ)

அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ)

ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம்-ஈ-அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா

தாறுல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குரான் மத்ரச மறுபெயர் தாறுல் அதர் அத்தபாவிய்யா

சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) மறுபெயர் ஜம்இய்யா

ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) மறுபெயர் அல் - தௌலா அல் - இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா

அல்கய்தா அமைப்பு

சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம்

சுப்பர் முஸ்லிம் அமைப்பு

தடைவிதிக்கப்பட்டுள்ள அமைப்புகளின் அல்லது அமைப்புகளைப் பிரதிநிதிப்படுத்துகின்ற அல்லது அதன் சார்பில் செயலாற்றுகின்ற வேறேதேனும் அமைப்பின்,

(அ) உறுப்பினரொருவராக அல்லது அங்கத்தவரொருவராக இருத்தலாகாது.

(ஆ) அதற்குத் தலைமைத்துவம் அளித்தலாகாது.

(இ) சீருடையை, உடையை, சின்னத்தை, தனிக்குறியை அல்லது கொடியை அணிதலோ, வெளிக்காட்டுதலோ, ஏந்துதலோஅல்லது உடைமையில் வைத்திருத்தலோ ஆகாது.

(ஈ) கூட்டமொன்றை அழைத்தலோ, கூட்டுதலோ, நடாத்துதலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது.

(உ) உறுப்பாண்மையைப் பெறுதலோ அல்லது அதைச் சேருதலோ ஆகாது.

(ஊ) ஓர் உறுப்பினருக்கு, அங்கத்தவருக்கு அல்லது வேறெவரேனும் இணையாளருக்குப் புகலிடமளித்தலோ, அவரை மறைத்துவைத்தலோ அல்லது அவருக்கு உதவுதலோ ஆகாது.

(எ) மேம்பாட்டுக்கு உதவுதலோ, அதனை ஊக்குவித்தலோ, அதற்கு ஆதரவளித்தலோ, மதியுரையளித்தலோ, உதவுதலோ அல்லது அதன் சார்பில் செயலாற்றுதலோ ஆகாது.

(ஏ) ஏதேனும் செயற்பாட்டை அல்லது நிகழ்வை ஒழுங்குபடுத்தலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது.

(ஐ) பணத்தை அல்லது பொருட்களை நன்கொடையளித்தலோ அல்லது உதவுதொகையளித்தலோ ஆகாது.

(ஒ) அதற்காக அல்லது அதன் பொருட்களைப் பெறுதலோ, களஞ்சியப்படுத்தலோ, இடம்பெயர்த்தலோ, உடைமையில்வைத்திருத்தலோ அல்லது விநியோகித்தலோ ஆகாது,

(ஓ) நோக்கத்தை ஊக்குவித்தலோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தலோ ஆகாது.

(ஒள) அதனோடு ஏதேனும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுதலாகாது, அல்லது

(ஃ) அதன் சார்பில் தகவலைப் பரப்புவித்தலாகாது.

என தடைச் செய்யும் வர்த்­த­மா­னியில் கூறப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே அமைப்புக்களை தடை செய்யும் வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர், அவ்வமைப்புக்களைச் சார்ந்தவர்கள், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அமைப்புக்களின் வங்கிக் கணக்குகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியிலேயே, தடை பட்டியலில் தாம் எவ்வித காரணமும் இன்றி இணைக்கப்பட்டுள்ளதாக கூறி சில முஸ்லிம் அமைப்புக்கள் நீதிமன்றை நாட முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vidivelli

No comments:

Post a Comment