திருகோணமலையில் சடலத்தை வீதியில் வைத்து மக்கள் ஆர்ப்பாட்டம்! - News View

Breaking

Post Top Ad

Thursday, April 1, 2021

திருகோணமலையில் சடலத்தை வீதியில் வைத்து மக்கள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை - சர்தாபுர பகுதியில் கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியை பொலிஸார் உடனடியாக விடுதலை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியை மறைத்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை - கண்டி பிரதான வீதியின் சர்தாபுர பகுதியில் இன்று காலை 9 மணி முதல் இடம்பெற்றது.

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார் வீதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த நபரை மோதியுள்ளது.

இதில் வீதியில் நின்று கொண்டிருந்த திருகோணமலை கப்பல்துறை ஆறாம் கட்டை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அந்தோனிமுத்து அந்தோணிசாமி (48 வயது) உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதி அதே நாளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனவே உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நீதியை பெற்றுக் கொடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை உயிரிழந்தவரின் வீட்டுக்கு போக்குவரத்து பொலிஸார் வருகை தந்து காரின் சாரதியின் உறவினர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 25,000 ரூபாய் வழங்கியதாகவும், இப்பணத்தை வைத்துக் கொள்ளுமாறு பொலிஸார் கூறியதாகவும் உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பணத்தை பெற்றுக் கொடுப்பது நீதியா எனக் கோரியும், தீர்க்கமான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் வீதியின் குறுக்காக வைக்கப்பட்டு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad