அரச ஊர்வலமாக புதிய இடத்தில் வைப்பதற்கு எடுத்துச் செல்லப்படவுள்ள எகிப்தின் மம்மிகள் - News View

Breaking

Post Top Ad

Friday, April 2, 2021

அரச ஊர்வலமாக புதிய இடத்தில் வைப்பதற்கு எடுத்துச் செல்லப்படவுள்ள எகிப்தின் மம்மிகள்

எகிப்தின் 22 பண்டைய பாரோ அரசர்கள் மற்றும் அரசிகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் கெய்ரோ நகர வீதியில் நாளை கண்கவர் அரச ஊர்வலமாக புதிய இடத்தில் வைப்பதற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.

பண்டைய எகிப்து பாணியில் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் 18 அரசர்கள் மற்றும் நான்கு அரசிகளின் மம்மிகள் மூப்பு அடிப்படையில் எடுத்துச் செல்லப்படவுள்ளன.

கடந்த பல தசாப்த காலமாக மத்திய கெய்ரோவில் உள்ள எகிப்து அருங்காட்சியகத்தில் இருந்த இந்த மம்மிகள் தலைநகரின் தெற்கில் 2017 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட எகிப்து தேசிய அருங்காட்சியகத்திற்கு மாற்றப்படவுள்ளன.

இங்கு இந்த மம்மிகள் தட்பவெப்பநிலையை கட்டுப்படுத்தக் கூடிய நவீன பெட்டிகளில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

தெற்கு எகிப்தில் கிறிஸ்துவுக்கு சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி புரிந்த இரண்டாவது செகெனென்ரே தாவோவின் மம்மி இந்த ஊர்வலத்தில் முதலாவது தேரில் எடுத்துச் செல்லப்படவுள்ளது. 

அதற்கு பின் கி.மு 12 ஆம் நூற்றாண்டில் இருந்த நான்காவது ரம்சீசின் மம்மி எடுத்துச் செல்லப்படும்.

பண்டைய எகிப்தின் பலம்மிக்க பெண் பாரோவான ஹட்செப்சுட் அரசி மற்றும் இரண்டாவது ரம்சிஸ் மம்மிகளும் இந்த ஊடர்வலத்தில் இடம்பெற்றுள்ளன.

நாளை மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ஊர்வலத்தில் எகிப்து கலைஞர்களின் இசை மற்றும் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இவை அனைத்து அரச தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.

1881 தொடக்கம் பெரும்பாலும் லக்சோருக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட 22 மம்மிகளும் 1900களின் ஆரம்பம் தொடக்கம் எகிப்து அருங்காட்சியகத்திலேயே வைக்கப்பட்டன.

No comments:

Post a Comment

Post Bottom Ad