பொய்யான விடயங்களை உண்மையை போன்று வடிவமைக்கும் தன்மை சமூக வலைத்தளங்களுக்கு உண்டு - பிரேம்நாத் தொலவத்த - News View

Breaking

Post Top Ad

Saturday, April 3, 2021

பொய்யான விடயங்களை உண்மையை போன்று வடிவமைக்கும் தன்மை சமூக வலைத்தளங்களுக்கு உண்டு - பிரேம்நாத் தொலவத்த

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுக்கள் பல முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் அரசாங்கத்தின் செயற்பாடுகளிலும் ஒரு சில குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றை நிவர்த்தி செய்துகொண்டு மக்களின் அபிலாஷைக்கு ஏற்ப செயற்படுதல் அவசியமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், பொய்யான விடயங்களை உண்மையை போன்று வடிவமைக்கும் தன்மை சமூக வலைத்தளங்களுக்கு உண்டு. தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானதாக காணப்பட்டாலும் ஒரு சிலர் அதனை விரும்பி ஆராய்கிறார்கள். உண்மையை தோற்கடிக்கும் வலிமை சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலியான செய்திகளுக்கு உண்டு.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல போலியான செய்திகள் வெளியாகின்றன. உணர்வுபூர்வமாக தாக்கம் ஏற்படுத்தும் போலியான செய்திகளை மக்கள் விரைவாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவதற்கு பிரதான காரணிகளில் ஒன்றாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளை குறிப்பிட வேண்டும். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் நல்லாட்சி அரசாங்கம் தோற்றம் பெற்றது.

தற்போதைய அரசாங்கத்திலும் ஒரு சில குறைபாடுகள் காணப்படுகின்றன. குறைபாடுகளை நாட்டு மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். மக்களின் வெறுப்புக்கு மத்தியில் அரசாங்கம் செயற்பட்டால் எவ்வித பயனும் தோற்றம் பெறாது. ஆகவே தவறுகள் திருத்திக் கொள்ளப்படுவது கட்டாயமாகும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad