பேரணி சர்வதேசம் வரை எழுச்சி பெறுவதற்கு உதவிய பொலிஸாருக்கு நன்றி - யோகேஸ்வரன் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

பேரணி சர்வதேசம் வரை எழுச்சி பெறுவதற்கு உதவிய பொலிஸாருக்கு நன்றி - யோகேஸ்வரன்

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

கடந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியை சர்வதேச மட்டம் வரை எழுச்சி பெறுவதற்கு உதவிய பெருமை எங்கள் வடக்கு கிழக்கிலிருக்கின்ற பொலிஸாரையே சாரும். போராட்டத்தினை இடையிடையே குழப்பியதன் காரணமாக மக்கள் எழுச்சி பெற்று அது நாளடைவில் விருட்சமாக, பெரிய போராட்டமாக மாறி விட்டதென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம், பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்ற சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் நேற்று மாலை கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது கடந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியை சர்வதேச மட்டம் வரை எழுச்சி பெறுவதற்கு உதவிய பெருமை எங்கள் வடக்கு கிழக்கில் இருக்கின்ற பொலிஸாரையே சாரும்.

உண்மையில் பொத்துவிலிலிருந்து ஆரம்பித்த போராட்டத்தை பேசாமல் விட்டிருந்தால் இவ்வளவு எழுச்சி பெற்றிருக்க மாட்டாது. ஆகவே, எழுச்சியைச் செய்தவர்கள் பொலிஸார்தான். 

நான் நினைக்கின்றேன். பொலிஸாருக்கு சில வேளைகளில் அரசாங்கத்துடன் ஏதும் முரண்பாடுள்ளதோ தெரியாது. அவர்கள் நீதிமன்றங்களில் தடையுத்தரவினைப் பெற்று வந்து இந்த சாத்வீகப் போராட்டத்தினை, அதுவும் சுகாதார நடவடிக்கையின் கீழ் பின்பற்றி ஒழுங்கு செய்த போராட்டத்தினை இடையிடையே குழப்பியதன் காரணமாக மக்கள் எழுச்சி பெற்று அது நாளடைவில் விருட்சமாக பெரிய போராட்டமாக மாறி விட்டது.

சிறு பகுதியாக வந்து கொண்டிருந்த போராட்டமானது, இவ்வாறு பொலிஸாரின் எதிர்ப்பு, தடை மேலும் மக்களின் உணர்வுகளைத் தூண்டி யாழ்ப்பாணத்திற்கு செல்கின்ற போது இலட்சக்கணக்கான மக்கள் பங்குபற்றிய போராட்டமாக மாறி, சர்வதே ரீதியாக இப்போராட்டம் எழுச்சி பெற்றிருக்கின்றது.

அதுமாத்திரமன்றி, இந்த எழுச்சிக்கு மூலகாரணகர்த்தாக்கள் வடக்கு கிழக்கிலுள்ள பொலிஸார்தான். இதற்காக பொலிஸார், பொலிஸ் தலைமை அதிகாரிகளுக்கு நாம் நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்.

ஏனெனில், இப்பேரணியை எழுச்சி பெறச் செய்தது அவர்களது செயற்பாடாகும். அரசாங்கத்திற்கெதிரான போராட்டமாக மாற்றியதும் உங்களுக்குரியதாகத்தான் இருக்கும் என்பதை தெரிவிக்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad