அசாத் சாலியின் கருத்து தவறெனில், விமல் வீரவன்ச தொடர்பிலும் குற்ற விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் - சமிந்த விஜேசிறி - News View

Breaking

Post Top Ad

Thursday, March 18, 2021

அசாத் சாலியின் கருத்து தவறெனில், விமல் வீரவன்ச தொடர்பிலும் குற்ற விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் - சமிந்த விஜேசிறி

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேகத்தினடிப்படையிலேயே அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அவ்வாறெனில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்ட அமைச்சர் விமல் வீரவன்சவின் கருத்துக்கள் தொடர்பிலும் குற்ற விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், முஸ்லிம் மக்களின் வாக்குக்களைப் பெற்றுக் கொள்வதற்காகவே அசாத் சாலி பல்வேறு கருத்துக்களை கூறிக் கொண்டிருந்தார். அவருக்கு இதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது தற்போதைய அரசாங்கமேயாகும். காரணம் தற்போதைய அரசாங்கம் அடிப்படைவாதத்தை அடிப்படையாக் கொண்டதாகும். அடிப்படைவாதம் இல்லாதொழிக்கப்பட்டால் அரசாங்கத்தின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.

எவ்வாறிருப்பினும் சட்டத்திற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். அத்தோடு அசாத் சாலி தவிர்ந்த , அமைச்சர் விமல் வீரவன்ச உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை அண்மையில் தெரிவித்தார். எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தகவல்களைத் தெரிவிக்கும் அமைச்சர்களும் குற்ற விசாரணை பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும்.

அசாத் சாலியின் கருத்து தவறெனில் அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேவேளை விமல் வீரவன்சவின் கருத்து தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதுவே ஒரே நாடு ஒரே சட்டமாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேகத்தினடிப்படையிலேயே அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் என்பவற்றினடிப்படையில் அவதானிக்கும் போது சரத் வீரசேகர தெரிவித்துள்ள விடயம் நகைப்பிற்குரியதாகும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad