மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியிடம் தொடரும் சி.ஐ.டி. தடுப்புக் காவல் விசாரணை - News View

About Us

About Us

Breaking

Thursday, March 18, 2021

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியிடம் தொடரும் சி.ஐ.டி. தடுப்புக் காவல் விசாரணை

(எம்.எப்.எம்.பஸீர்)

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுவினரால் கைது செய்யப்பட்டு 48 மணி நேரம் கடந்துள்ள நிலையில், தொடர்ந்தும் அவரிடம் தடுப்புக் காவலில் சிறப்பு விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

'நேரடி, பகுப்பாய்வு சான்றுகளை மையப்படுத்தி தற்போது அசாத் சாலியிடம் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மையப்படுத்திய விசாரணைகளில் சி.ஐ.டி.யினருக்கு கிடைத்துள்ள தகவல்களை வைத்து இவ்விசாரணைகள் நடக்கின்றன.

குறிப்பாக மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரம் உள்ளிட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் இணைந்த சம்பவங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடக்கிறது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, அசாத் சாலி விவகார விசாரணைகள் குறித்து பொலிஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் கடந்த 16 ஆம் திகதி மாலை 6.00 மனியளவில் கொள்ளுபிட்டியில் அவரது காரில் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார்.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் , சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், சி.ஐ.டி. பனிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸாவின் ஆலோசனை பிரகாரம் உதவி பொலிஸ் அத்தியட்சர் உபுல் செனவிரத்னவின் கீழான பிரத்தியேக விசாரணைக் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் உள்ள விதிவிதாங்களுக்கு அமைய, சி.ஐ.டி. பணிப்பாளரின் ஒப்புதலுடன் 72 மணி நேர தடுப்புக் காவலில் அசாத் சாலி சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடியின் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கைது செய்யப்படும் போது அவரது காரிலிருந்து வெளிநாட்டு துப்பாக்கியொன்றும் அதன் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை வரை அது குறித்த விசாரணைகளில் குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

எவ்வாறாயினும் அந்த துப்பாக்கி 2002 ஆம் ஆண்டு முதல் உரிய அனுமதியுடன் அசாத் சாலி பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கி என அவரது சட்டத்தரணியான சிரேஷ்ட சட்டத்தரனி என்.எம். சஹீட் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைககுழுவின் அறிக்கையில் அசாத் சாலிக்கு பாதகமான விடயங்கள் காணப்பட்டன.

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம் மற்றும் வனாத்துவில்லு வெடிபொருள் மீட்பு சம்பவம் ஆகிய தற்கொலை தாக்குதலுடன் இணைந்ததான சம்பவங்களில் கைதான சந்தேக நபர்களை விடுதலை செய்ய அசாத் சாலி தலையீடு செய்திருந்ததாக சாட்சிகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் ஆணைக்குழுவின் அறிக்கையில் அசாத் சாலி அதில் தலையீடு செய்திருக்கக்கூடாது என சுட்டிக்கட்டப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியிலேயே அசாத் சாலி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அசாத் சாலி பயங்கரவாத குற்றச்சாட்டில் கைதாவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் கடந்த 2013 மே மாதம் 2 ஆம் திகதி, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அசாத் சாலி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்தியாவின் ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு இன மத முரண்பாடுகளை தூண்டும் வகையில் அவர் அளித்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய பேட்டியொன்றினை மையப்படுத்தி அக்கைது இடம்பெற்றிருந்தது.

இதனிடையே கடந்த 10 ஆம் திகதி வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து ஊடாக (ஷரீ ஆ சட்டம் குறித்த கருத்து) தண்டனை சட்டக்கோவை, பயங்கரவாத தடைச் சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச இணக்கப்பட்டு சட்டங்களின் கீழ் அசாத் சாலி குற்றமிழைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் அறிவித்திருந்தார்.

அது தொடர்பிலும் கைது செய்யப்பட்ட அசாத் சாலியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment