டெல்லி இல்லத்தில் பா.ஜ.க. எம்.பி. பிணமாக மீட்பு - நடந்தது என்ன? - News View

Breaking

Post Top Ad

Thursday, March 18, 2021

டெல்லி இல்லத்தில் பா.ஜ.க. எம்.பி. பிணமாக மீட்பு - நடந்தது என்ன?

இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் சுவரூப் சர்மா, மாண்டி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பா.ஜ.க. எம்.பி.யாக பதவி வகித்தார்.

இமாச்சல பிரதேச பா.ஜ.க. எம்.பி. ராம் சுவரூப் சர்மா டெல்லியில் வடக்கு அவினியூவில் உள்ள இல்லத்தில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் அவரது அந்தரங்க உதவியாளர் பணி நிமித்தமாக நேற்று காலை 7.45 மணிக்கு அவருடைய வீட்டுக்கு சென்றார். கதவைத் தட்டிய போதும், திறக்கப்படவில்லை. கதவு, உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.

பலமுறை தட்டியும் பதிலற்றுப் போன நிலையில், அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்துப் பார்த்தால் வீட்டில் தனது அறையில் ராம் சுவரூப் சர்மா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதைத் தொடர்ந்து தூக்கில் இருந்து அவரது உடலை மீட்டு உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவரது உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.

இது குறித்து டெல்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் சின்மோய் பிஸ்வால் கூறுகையில், “இது ஒரு தற்கொலை சம்பவம் போல தோன்றுகிறது. ஆனால் நாங்கள் விசாரணையைத் தொடர்வோம். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும்தான் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய முடியும். கேள்விகள் எழுப்பவும் இயலும்” என தெரிவித்தார்.

அவர் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மாண்டி தொகுதியில் இமாச்சல பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங்கை சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி கண்டவர். 2019 தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவர் அந்த மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளராக பல்லாண்டு காலம் பணியாற்றியவர் ஆவார்.

ராம் சுவரூப் சர்மா மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராம் சுவரூப் சர்மா மறைவுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சபையை சபாநாயகர் ஓம் பிர்லா 2 மணி நேரத்துக்கு ஒத்தி வைத்தார். நேற்று நடக்கவிருந்த பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

மறைந்த ராம் சுவரூப் சர்மாவுக்கு சாம்பா சர்மா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad