ஜெனிவா விவகாரத்திற்கு தீர்வு காண அரசாங்கமும், எதிர்க்கட்சியும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் - அனைவரிடமும் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளோம் என்கிறார் சுசில் பிரேமஜயந்த - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

ஜெனிவா விவகாரத்திற்கு தீர்வு காண அரசாங்கமும், எதிர்க்கட்சியும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் - அனைவரிடமும் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளோம் என்கிறார் சுசில் பிரேமஜயந்த

(இராஜதுரை ஹஷான்)

ஜெனிவா விவகாரத்திற்கு தீர்வு காண அரசாங்கமும், எதிர்க்கட்சியும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும். இவ்விடயம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை குறித்து 2009 ஆம் ஆண்டு தொடக்கம் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் அனைத்தும் மீள்பரிசீலனை செய்யப்படும் என தொலைநோக்கு கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஜெனிவா விவகாரம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46.1 பிரேரணை இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது. 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தொடர்பில் பல போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை இலங்கை மக்களின் மக்களாணைக்கு முரணானது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கைக்கான இராஜதந்திரிகள் தொடர்பில் தற்போது மாறுபட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. இவ்விடயம் குறித்து வெளிவிவகார அமைச்சு உரிய கவனம் செலுத்தும். 

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இரு வேறுபட்ட கொள்கைகளை கடைப்பிடிக்கின்றமை ஐக்கிய நாடுகள் சபையின் தோற்ற கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஜெனிவா விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் அரசாங்கம், எதிர்கட்சி ஒன்றினைந்து செயற்பட வேண்டும். ஜெனிவா விவகாரத்தை எதிர்க்கட்சியினர் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து விசேட பொறிமுறையை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பில் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள சாதக மற்றும் பாதகமான அறிக்கைகள் அனைத்தும் மீள்பரிசீலனை செய்யப்படும். உள்ளக விவகாரங்களில் தலையிட சர்வதேச நிபுணர் குழுவிற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad