இடைக்கால தடையை நீக்கக் கோரி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தாக்கல் செய்த மேன்முறையீடு தள்ளுபடி - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 31, 2021

இடைக்கால தடையை நீக்கக் கோரி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தாக்கல் செய்த மேன்முறையீடு தள்ளுபடி

யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் சிலரை கட்சியிலிருந்து விலக்கும் தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக் கோரி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தாக்கல் செய்த மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபை உறுப்பினர்களான வி.மணிவண்ணன், பா.மயூரன் ஆகியோரை கட்சியிலிருந்து விலக்குவதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அறிவித்திருந்தது.

கட்சியின் தீர்மானத்தை ஆட்சேபித்து வி.மணிவண்ணன், பா.மயூரன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். யாழ். நீதவான் நீதிமன்றம் குறித்த உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கும் முடிவிற்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த இடைக்கால தடைக்கு எதிராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் மாகாண குடியியில் மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் குறித்த மனுவை மாகாண குடியியல் மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நீதிபதிகளான பாலேந்திரன் சசி மகேந்திரன் மற்றும் T.L. அப்துல் முனாப் ஆகியோர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

இதேவேளை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை யாழ். மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

இந்த வழக்கினை யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதிவாதிகளான அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது, வழக்கை மே மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் சி.சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment