”உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் கோத்தா, பசில் - நிதி உதவியளித்தவர் நிசங்க சேனாதிபதி” : விசாரணைக்கு ஆஜராகாத அசோக அபேசிங்க எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

”உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் கோத்தா, பசில் - நிதி உதவியளித்தவர் நிசங்க சேனாதிபதி” : விசாரணைக்கு ஆஜராகாத அசோக அபேசிங்க எம்.பி.

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை நடாத்தியவர்கள், அதற்கு நிதி உதவி அளித்தவர்கள் தொடர்பில் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க வெளியிட்ட கருத்து தொடர்பில் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று 2 ஆவது நாளாகவும் அவர் விசாரணைக்கு சமுகமளிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர்கள், பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவிடம் கேள்வி எழுப்பிய போது,

'ஆம், அவருக்கு 2 ஆவது தடவையாக குற்றவியல் சட்டத்தின் 109 (6) ஆம் அத்தியாயத்தின் கீழ் அறிவித்தல் விடுக்கப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு வரவில்லை. விசாரணைக்கு வராமைக்கு நியாயமான காரணங்கள் இல்லை எனில், விசாரணைக்கான அழைப்பை புறக்கணித்தமை தொடர்பிலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். தற்போது அவர் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் விசாரணையாளர்கள் ஆராய்ந்து தீர்மானம் எடுப்பர்' என தெரிவித்தார்.

அண்மையில் குருணாகல் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, 'ரணில் விக்ரமசிங்க செய்த தவறு மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாகவே 2015 இல் அமைத்த ஆட்சி கவிழ்ந்தது.

அதாவது மத்திய வங்கி பிணை முறி மோசடி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலே ஆட்சி கவிழ காரணமானது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் கோத்தா - பசில் ஆகியோரே உள்ளனர். அத்தாக்குதலுக்கான நிதி உதவியை அளித்தவர் நிசங்க சேனாதிபதி' என குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆளும் கட்சியைச் சேர்ந்த உதயன கிரிந்திகொட, பிரமித்த பண்டார தென்னகோன், சஞ்ஜீவ எதிமான்ன, மதுர விதானகே, ஜகத் குமார சுமித்ர ஆரச்சி, மிலான் ஜயதிலக ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.ஐ.டி.க்கு முறைப்பாடளித்திருந்தனர்.

அசோக அபேசிங்க எம்.பி. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணமும், இனங்களுக்கு இடையே குழப்பத்தை தோற்றுவிக்கும் வண்ணமும் கருத்து வெளியிட்டுள்ளதாகவும், நாட்டின் தலைமை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையில் சதி செய்துள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த சொய்ஸாவின் ஆலோசனைக்கமைய இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment