பிணையில் விடுவிக்கப்பட்டவர் திடீர் மரணம் - விசாரணைகளை முன்னெடுக்கும் விசேட பொலிஸ் குழு - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

பிணையில் விடுவிக்கப்பட்டவர் திடீர் மரணம் - விசாரணைகளை முன்னெடுக்கும் விசேட பொலிஸ் குழு

(செ.தேன்மொழி)

பிணையில் விடுவிக்கப்பட்ட நபரின் திடீர் மரணம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கரொருவரின் தலைமையில் விசேட பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கல்கிஸ்ஸ பகுதியில் கடந்த மாதம் 18 ஆம் திகதி 50 கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட அவர், மறுதினம் கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது நீதிமன்றம் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் பணத்தை அபராதமாக செலுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.

சந்தேக நபர் அந்த அபராத பணத்தை செலுத்தி விட்டு, அன்றைய தினமே நீதிமன்றத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் இவர் கடந்த மாதம் 21 ஆம் திகதி திடீரென சுகயீனமடைந்து கலுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு நாட்கள் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 25 ஆம் திகதியே இவர் மீண்டும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

அதற்கமைய, நேற்று மீண்டும் சுகயீனமடைந்துள்ள அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், நேற்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் தொடர்பான நீதிவான் பரிசோதனைகளை கல்கிஸ்ஸ நீதிவான் மேற்கொண்டுள்ளார்.

குறித்த மரணம் ஏதேனும் குற்றச் செயற்பாட்டின் காரணமாக இடம்பெற்றுள்ளதா என்பதை கண்டறிவதற்காக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை நடத்தி வருகின்றது.

இந்நிலையில் நாளைய தினம் மரண பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன. இதன்போது ஏதேனும் குற்றச் செயற்பாட்டின் காரணமாகவே மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தால் உரிய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad