மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு அரச காணி பங்கீடு - முற்றாக புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்கள் - News View

Breaking

Post Top Ad

Saturday, March 20, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு அரச காணி பங்கீடு - முற்றாக புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்கள்

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் அவசரக் கூட்டம் ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் இன்று (20) சனிக்கிழமை ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றையதினம் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட அரச காணி பங்கீட்டில் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் ஆராயப்பட்டது.

ஊடகவியலாளர்கள் என்பவர்கள் இன, மத, மொழி அடையாளங்களுக்கு அப்பால் பணியாற்றுவார்கள் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்று வேறுபடுத்திக்காட்ட முனைவது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஒரு செயற்பாடாக அமையலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், அரச அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்கான பல்வேறு ஆலோசனைகளும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம். பாரிஸ் தெரிவித்தார்.

இக்கூட்டத்தின் போது சிரேஷ்ட ஊடகவியலாளர்களான எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுசையின், ஏ.ஜீ.ஏ.கபூர் ஆகியோரும் மற்றும் தவிர்க்க முடியாத காரணத்தினால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல் போன சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஜீ.நாஸரும் இது தொடர்பில் தொலைபேசி வாயிலாகவும் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி, வாழைச்சேனை பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(எம்.பஹ்த் ஜுனைட்)

No comments:

Post a Comment

Post Bottom Ad