ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனம் கூட்டிணைந்து இலங்கைக்கு நிதியுதவி - News View

About Us

About Us

Breaking

Thursday, March 18, 2021

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனம் கூட்டிணைந்து இலங்கைக்கு நிதியுதவி

திரிபோஷா உற்பத்திக்கான சோளம் கொள்வனவு செய்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனம் ஆகியன 600,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதியுதவி வழங்குகின்றன.

1.1 மில்லியன் தாய்மார் மற்றும் சிறுவர்களுக்கு வழங்கப்படும் சோளம் சார்ந்த உணவுப் பொருளான திரிபோஷாவைத் தயாரிப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

போஷாக்கு குறைவான சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு போஷாக்கினை வழங்குவதற்காக சுமார் 50 வருடங்களாக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திரிபோஷா நிகழ்ச்சியினைத் தொடர்வதற்கு கொரியாவின் உதவித் தொகை துணை புரியும்.

மும்மடங்கு ஊட்டச்சத்துகள் என்ற பொருள்படும் திரிபோஷா என்பது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மிகை நிரப்பு உணவு உற்பத்தியாகும்.

எடை குறைந்த அல்லது குறைந்த உடல் எடை வளர்ச்சி வீதம் கொண்ட ஐந்து வயதுக்கு குறைந்த சிறுவர்கள், குறைந்த உடல் எடை சுட்டெண் கொண்ட கர்ப்பிணி, தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு பொது சுகாதார திட்டத்தின் கீழ் இது இலவசமாக வழங்கப்படுகின்றது.

பெருந்தொற்றினை எதிர்கொள்ளும் அதேவேளையில், எதிர்பாராத சூழ்நிலைகளை உலகம் எதிர்கொண்டு வருகின்றது' என்று சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் கங் யூன் ஹவா தெரிவித்தார்.

இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய மக்களின், குறிப்பாக, கொரோனாவினால் பாரபட்சமின்றி பாதிக்கப்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணி மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் குறிக்கோளுடன் திரிபோஷா தேசிய நிகழ்ச்சி சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனத்தின் பங்களிப்புடன் பரவலாக்கப்பட்டுள்ளது.

இந்த சிக்கலான நேரத்தில் இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனம் ஒருமைப்பாட்டுடன் நிற்கின்றது என்றும் அவர் கூறினார்.

வேலைவாய்ப்பின்மை மற்றும் வருமானக் குறைவு உள்ளடங்கலாக நாட்டில் புதிய சவால்களை கொரோனா கொண்டு வந்துள்ளது.

இது ஊட்டச்சத்துமிக்க உணவுக்கான அணுகும் வசதிக்கான குடும்பத்தின் ஆற்றலை பாதிப்பதுடன், நாட்டில் சுகாதார மற்றும் ஊட்டச்சத்து தரங்களின் மீது நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தலையும் அளிக்கின்றது.

சிறுவர்கள் மற்றும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து எளிதில் அணுகக் கூடிய விதமாக திரிபோஷா நிகழ்ச்சி இருக்கின்றது.

திரிபோஷா விநியோகத்தை தொடர்வதனை உறுதி செய்வதற்கு உலக உணவுத் திட்டத்தின் உதவியை சுகாதார அமைச்சு நாடியிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், உலக உணவுத் திட்டமானது சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனத்துடன் இணைந்து திரிபோஷா நிகழ்ச்சியை ஊக்குவிப்பதற்கும், பெண்கள், சிறுவர்களின் சுகாதார மற்றும் ஊட்டச்சத்தினை காப்பதற்கும், உதவுவதற்கும் நிதியை வழங்குவதற்கு ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2021 மற்றும் அதற்கு அப்பால், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் நாட்டில் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் நிலையான அபிவிருத்தி இலக்கு 2 ஐ அடைவதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக தேசிய சுகாதார முறையை மேம்படுத்த உலக உணவுத்திட்டம் தொடர்ந்து அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும் என்றும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment