தடுப்பூசி பெற்று 2 வாரங்களில் நாடு திரும்புபவர்கள் PCR இன் அடிப்படையில் வீடு திரும்ப வசதி : வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு புதிய தனிமைப்படுத்தல் சுற்றுநிருபம் வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 18, 2021

தடுப்பூசி பெற்று 2 வாரங்களில் நாடு திரும்புபவர்கள் PCR இன் அடிப்படையில் வீடு திரும்ப வசதி : வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு புதிய தனிமைப்படுத்தல் சுற்றுநிருபம் வெளியீடு

கொவிட் பரவல் சூழ்நிலையில், வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கையர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான திருத்தப்பட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அடங்கிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த சுற்றறிக்கை இன்று (18) வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, தடுப்பூசியை பெற்றுக் கொண்டதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டிற்குள் நுழையும் இலங்கையர்கள் அல்லது சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெளிவிவகார அமைச்சு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட உரிய அரசாங்க அலுவலகங்களின் வழக்கமான அனுமதியை பெறுவதோடு, உரிய விண்ணப்பங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்தலின் அடிப்படையில் இந்நடைமுறை அமைந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி பெற்று வருகை தருவோர் விமான நிலைய வைத்திய அதிகாரியிடம், தடுப்பூசி பெற்றுக் கொண்டமைக்கான சான்றிதழின் முதற்பிரதியை சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், அவை ஆங்கிலம் தவிர்ந்த வேறு மொழிகளில் காணப்பட்டால் உறுதிப்படுத்தப்பட்ட ஆங்கில மொழி பெயர்ப்பு சான்றிதழ் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பாக, பரிந்துரைக்கப்பட்ட அளவிலான கொவிட் தடுப்பூசியை பெற்று, அதன் பின்னரான இரு வார காலப் பகுதியை பூர்த்தி செய்து நாடு திரும்புபவர்கள், உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் PCR சோதனையொன்றை மேற்கொண்டு, அதன் பிரதிபலனின் அடிப்படையில் கொவிட்-19 தொற்று இல்லை (PCR Negative) என உறுதிப்படுத்தப்படுவதன் மூலம், அவர்கள் வீடு திரும்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து அவர்களது போக்குவரத்தை அவர்கள் ஒழுங்கு செய்வதோடு, வீடு செல்லும் வரை உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது கட்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடு திரும்பும் நபர்கள், தங்களது பிரதேசத்திற்கான சுகாதார வைத்திய அதிகாரியை (MOH) தொடர்பு கொண்டு தங்களது விபரங்களை அறிவிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று இல்லை (PCR Negative) என உறுதிப்படுத்தப்பட்டு இவ்வாறு வீடு திரும்புபவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்த வேண்டி அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், நாடு திரும்பி 7ஆவது நாளில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகூடத்தில் இரண்டாவது PCR இனை மேற்கொண்டு, அதன் அறிக்கையை MOH இற்கு வழங்க வேண்டும் எனத் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நடைமுறைகளின் போது ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் கொவிட்-19 தொற்று தொடர்பான அறிகுறிகள், அல்லது தொற்று காணப்படுமாயின், அதனை MOH இற்கு அறிவிப்பதோடு, சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள உரிய சிகிச்சையை பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாமல் நாட்டிற்கு வருவோரை ஹோட்டல்களில் தனிமைப்படுத்தும் காலம் 7 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியை பெறாமல் வருகை தருவோர் முதலாவது நாள் மற்றும் ஏழாவது நாளில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். இந்த பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படாவிட்டால், அவர்கள் ஏழாவது நாளில் ஹோட்டல் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ய முடியும்.

சுகாதார சேவைகள் பணிப்பாளரால் வெளியிடப்பட்ட குறித்த சுற்றுநிருபம் வருமாறு

No comments:

Post a Comment